Breaking
Sun. Nov 24th, 2024

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு பிரதேச வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று  மாலை திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக சென்ற மக்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் பல்வேறு முறைப்பாடுகளை முன்வைத்தனர்.

இந்த நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியசாலையிலுள்ள பிரச்சினைகளை நேரடியாக அவதானித்தார்.

குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக செல்லும் மக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாகவும், வைத்தியசாலையில் நோயாளர் விடுதியில் உள்ளவர்கள் குறித்த நேரத்திற்கு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகளை பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரிடம் தெரிவித்திருந்திருந்தனர்.

இந்நிலையிலே நேரடியாக பிரச்சினைகளை ஆராய அமைச்சர் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.
இதன் போது மன்னார் பிரதி பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் றோய் பிரீஸ் அங்கு சமூகமளித்திருந்தார்.

பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்த அமைச்சர் வைத்தியசாலைக்கு வரும் மக்களை தாமதிக்காது மருத்துவ உதவிகளை வழங்கி அனுப்பி வைக்குமாறும், மக்களுடன் அன்பான முறையில் நடந்து கொள்ளுமாறும் வைத்தியசாலை பணியாளர்களுக்கு தெரிவித்தார்.

கடமை நேரங்களில் வைத்தியசாலை பணியாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு வைத்தியசலை பணியாளர்களுக்கு தெரிவித்தார்.

அத்தோடு, பள்ளமடு பிரதேச வைத்தியசாலை தொடர்பில் தொடர்ந்தும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், எதிர்வரும் காலங்களில் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அனைவரும் செயற்பட வெண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *