மன்னார் பஜார் பகுதியில் பாதசாரிகளுக்கு இடையூரை ஏற்படுத்தும் வகையில் விற்பனை பொருட்களை மக்கள் நடமாடும் பகுதியில் பரவி விற்பனை செய்த 8 வர்த்தகர்களை மன்னார் பொலிஸார் இன்று (15) திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளதோடு மக்கள் நடமாடும் பகுதியில் போடப்பட்ட பொருட்களையும் மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் இன்று காலை மன்னார் பஜார் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன் போது மன்னார் பஸார் பகுதியில் உள்ள 8 வர்த்தகர்கள் நடை பாதையில் தமது வியாபார பொருட்களை பரப்பி பாதசாரிகளுக்கு இடையூரை ஏற்படுத்திய நிலையில் தமது வியபார நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களுக்குச் சென்ற மன்னார் பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் பிரிவினர் பாதசாரிகள் நடமாடும் பகுதியில் பரவி வைக்கப்பட்டிருந்த பொருட்களை கைப்பற்றியுள்ளதோடு வியாபார நிலையங்களின் உரிமையாளர்களையும் கைது செய்தனர்.கைப்பற்றப்பட்ட பொருட்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு கைது செய்யப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் 8 பேரும் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குறித்த வர்த்தக நிலையங்களில் உரிமையாளர்கள் 8 பேரும் விசாரனைகளின் பின் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 8 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகவும் மன்னார் நீதி மன்றத்தில் வளக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.