நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டியின் போது நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்தே இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ச்சியாக தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நொச்சிக் குளத்தை சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் சகோதரர்கள் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ தினமான நேற்று (10) வெள்ளிக்கிழமை உயிரிழந்தவர்களின் மூத்த சகோதரர் ஒருவரும், மேலும் ஒருவரும் நொச்சிக்குளத்தில் உள்ள மாட்டு வண்டி சவாரியில் வெற்றி பெற்ற ஒருவருடைய வீட்டிற்குச் சென்று தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் குறித்த இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வாள்வெட்டு இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த இருவரும் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்..
இந்த நிலையில் உயிலங்குளத்தை சேர்ந்த மேலும் இரு சகோதரர்கள் நொச்சிக்குளம் கிராமத்தின் வீடு ஒன்றினுள் நுழைந்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையிலே சகோதரர்களான குறித்த இருவர்கள் மீதும் வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தொடர்ச்சியாக அவர்களின் அராஜக முறையை தாங்க முடியாத நிலையிலே குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
வீட்டினுள் சென்று வன்முறையை மேற்கொண்ட நிலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் உயிலங்குளத்ததை சேர்ந்த சகோதரர்களான யேசுதாசன் றோமியோ (வயது – 40) மற்றும் யேசுதாசன் தேவதாஸ் (வயது – 33) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் சகோதரர் ஒருவரும், உறவினர் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்