மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், 2017 ஆம் ஆண்டிற்கான இறைச்சி விற்பனை நிலையங்களுக்கான கேள்வித்தொகை அதிகரித்துள்ளதால் நுகர்வோர்
பாதிப்படைவதற்கான சாத்தியக்கூறு அதிகரித்துள்ளதாக மன்னார் மக்கள் விசனம்
தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
2017 ஆம் ஆண்டிற்கான மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த கேள்வித்தொகை 15 இலட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபா ஆகவும், பட்டின ஆட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கு சபையின் குறைந்த கேள்வித்தொகை 3 இலட்சம்
ரூபா ஆகவும் கேள்வித்தொகை கோரப்பட்டடுள்ளது.
மேலும், பள்ளிமுனை மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த
கேள்வித்தொகை 3 இலட்சத்து 44 ஆயிரத்து 850 ரூபா எனவும் மற்றும் பெரியகமம் மாட்டிறைச்சி
விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த கேள்வித் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபா எனவும், மன்னார் நகர சபையினால் கேள்வித்தொகை கோரப்பட்டுள்ளது.
எனினும் மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த
கேள்வித்தொகை 15 இலட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாய் என மன்னார் நகர சபை அறிவித்துள்ளதன்
காரணமாக மாட்டிறைச்சி நுகர்வோர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஒப்பந்த தொகை அதிகரித்துள்ளதன் காரணத்தினால் குறித்த ஒப்பந்தத்தை பெற்று,
மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்தினை நடத்துபவர்கள்
மாட்டிறைச்சியின் நிர்ணயிக்கப்பட்ட விலையினை விடவும் அதி கூடிய விலைக்கு
விற்பனை செய்யும் நிலை ஏற்படும் என மக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி, மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்தில் மன்னார் நகர சபையினால் நிர்ணயிக்கப்பட்ட விலையினை மீறி அதிகூடிய விலைக்கு
மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
எனினும் மன்னார் நகர சபை குறித்த விலைக்கட்டுப்பாடுதொடர்பாக பல தடைவைகள்
அறிவித்தல்களை வழங்கிய போதும் கூட கட்டுப்பாட்டு விலையை விட சற்று
அதிகரித்த விலைக்கே இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2017 ஆம்
ஆண்டிற்கான மன்னார் பட்டின மாட்டிறைச்சி விற்பனை நிலையத்திற்கான சபையின் குறைந்த
கேள்வித்தொகையாக 15 இலட்சத்து 97 ஆயிரத்து 200 ரூபாய் கோரப்பட்டுள்ளமை மன்னார் மக்களை பாதிப்படையச் செய்யும் நடவடிக்கையாக காணப்படுவதாகவும், தமது இலாபத்திற்காக ஒப்பந்ததாரர்கள் மக்களிடம் இருந்தே மேலதிக பணத்தினை அறவிடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என நுகர்வோர் இதன்போது விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.