மன்னார் நகரசபை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற நிலையில், அயலவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையிலான காணிகள் மன்னார் நகரசபையினால் கையகப்படுத்தப்படவுள்ளதாக மன்னார் நகரசபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காணியின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
மன்னார் நகரசபை பிரிவிற்கு உட்பட்ட பல கிராமங்களில் மக்கள் இல்லாத நிலையில் வெற்றுக்காணிகள் காணப்படுகின்றன. குறித்த காணிகள் பற்றை வளர்ந்த நிலையில் பாரிய காடுகளாக காணப்படுகின்றன.
இதனால் குறித்த காணிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக குறித்த காணிகளில் வசிப்பதற்கான சாதாரண சூழல் காணப்படாமை, டெங்கு நுளம்பின் தாக்கத்தை ஏற்படுத்தும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்தமை, பற்றை காணிகளாக காணப்படுவதினால் விச பூச்சிகளின் அதிகரிப்பு, இரவு நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்த கூடிய திருடர்களின் நடமாட்டம், சட்டவிரோத செயல்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே மன்னார் நகரசபை பிரிவிற்கு உட்பட்ட பராமரிப்பு இல்லாத நிலையில் காணப்படும் காணிகளின் உரிமையாளர்கள் குறித்த காணிகளை துப்பரவு செய்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
அவ்வாறு பாராமரிக்காது பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் காணிகள் மன்னார் நகரசபையினால் அடையாளப்படுத்தப்பட்டு நகரசபையினால் வழங்கப்படும் கால அவசாகத்திற்கு அமைய துப்பரவு பணிகள் மேற்கொள்ளாத பட்சத்தில் அயலவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காணிகள் மன்னார் நகரசபையினால் கையகப்படுத்தப்படவுள்ளதோடு, குறித்த காணியின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
மன்னார் மூர்வீதியில் அவ்வாறான காணி அடையாளம் காணப்பட்டு காணி உரிமையாளரின் விசேட கவனத்திற்கும் அறிவுறுத்தல்களுக்கும் கொண்டு செல்லப்பட்டதோடு, குறித்த காணியை துப்புரவு செய்ய 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு கட்டளை துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த கால அவகாசத்தில் குறித்த காணியின் உரிமையாளர் காணியை துப்புரவு செய்யாத பட்சத்தில் குறித்த காணியை மன்னார் நகரசபை கையகப்படுத்தி காணியின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் என கூறியுள்ளார்.