மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பல இடங்களில் இன்றைய தினம்(04) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்திற்குச் சூழல் காணப்படும் வீடுகளின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாகச் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், டெங்கு ஒழிப்பு செயலணி, உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.
அதே நேரம் மன்னார் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் வைத்தியசாலை பகுதிகளைச் சூழ உள்ள பகுதிகள் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் இவ்வாரம் முழுவதும் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.