மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு எதிராக மன்னார் – தோட்ட வெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல
வர்த்தகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று காலை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து தான் வசித்து வருவதாகவும், கடல் உணவு பொருட்களை கொள்வனவு செய்து வியாபாராத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக தனது சுய கௌரவத்தை உதாசீனம் செய்யும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனது வீட்டில் சட்ட விரோதமான பொருட்கள் உள்ளதாக கூறி, கடந்த 17ஆம் திகதி சுமார் 10 இற்கும் மேற்பட்ட பொலிஸார் மோப்ப நாய் ஒன்றை கொண்டு வந்து எனது வீட்டை முழுமையாக சேதனையிட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், எனது குடும்பத்திற்கு ஆதரவாக அருட்தந்தை ஒருவர் வீட்டிற்கு வந்து இறுதி நேரம் வரை
காத்திருந்தார்.
மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் எவ்விதமான சந்தேகபொருட்களையும் கைப்பற்றவில்லை.
இறுதியாக தவறான தகவல் என கூறிய மன்னார் பொலிஸார் நடந்தவற்றை வாக்கு மூலமாக பதிவு செய்து விட்டுச் சென்றனர்.
குறித்த சம்பவத்தினால் எனது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதே போன்று கடந்த 27ஆம் திகதியும் காலை 7.35 மணியளவில் எனது வீட்டிற்கு வந்த சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் எனது வீட்டை சுற்றி வளைத்து
தேடுதல்களை மேற்கொண்டு விட்டு தவறான தகவல் எனக் கூறிச் சென்றுள்ளனர்.
தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற இந்த சம்பவங்களால் எனது கிராம மக்கள் மத்தியில் சந்தேக பார்வையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே கடந்த 17ஆம் திகதி எனது வீட்டிற்கு வந்து சோதனைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விளக்கத்தினை வழங்க வேண்டும் எனவும், தவறான இரகசியத் தகவழினை வழங்கிய குறித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான இரகசிய தககல் தொடர்பில் உரிய விசாரனைகளை மேற்கொண்டு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/statements/01/159177?ref=home-latest