பிரதான செய்திகள்

மன்னார்,யாழ்ப்பாணம் மாவட்டங்களில் சட்டவிரோத மண் அகழ்வு! மக்கள் விசனம்

சட்டவிரோத மணல் அகழ்வு, தற்போது வடமாகாணத்தில் பாரிய சூழல் பிரச்சினையை உருவாக்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மணல் அகழ்வதனால் கடல் பகுதியை அண்டிய பிரதேசங்களில் கடல் நீர் உட்புகும் அபாயம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கட்டுமானப்பணிகளுக்கான மணலுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதன் காரணமாக குறைந்த விலையில் மணலை பெற்ற மக்கள், தற்போது பல மடங்கு விலைக்கு மணலை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் 17,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு டிப்பர் மணலை தற்போது 38,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தின் தோத்தாவாடி, இழுப்பைக்கடவை, கூராய், மடு, பாலம்பிட்டி, அருவியாறு மற்றும் கல்லாறு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இங்கு மணல் அகழ்வதற்கு அநுராதபுரத்திலுள்ள புவிச்சரிதவியல் திணைக்கள அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் வியாபார நோக்கத்திற்காக அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி செயற்படும் சிலரால் மக்கள் பிரச்சினைகளை சந்தித்துள்ளனர் என கூறப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் கடற்கரையில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் எதுவும் வழங்கப்படாத நிலையில், இரவு நேரங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தென்மராட்சி, கொப்பேலி கடற்கரையிலும் இரவு நேரங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கெற்பேலி கடற்கரையில் கடல் மட்டத்தினை விடவும் ஆழமான முறையில் மணல் அகழப்பட்டுள்ளதால் கடல் நீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் காணப்படுகின்றது.

மேலும், இந்த மணல் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் நேரடியாக தலையிட்டு மாற்று வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ஆசிரியர்களின் நிகாப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய ஆசாத் சாலி

wpengine

பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.

wpengine

ஐபோன், ஆன்ட்ராய்டு கைப்பேசியினை சார்ஜ் செய்ய உதவும் LM Cable

wpengine