ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழி காட்டலின் கீழ் அமுல்படுத்தப்பட்ட ‘நிலமெஹெவர’ ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்ட நடமாடும் சேவை நேற்று மன்னாரிலும் இன்று நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவிலும் இடம் பெற்றது.
இதன்போதும், மக்கள் உரிய முறையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்தள்ளனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்ட செயலகம் மற்றும் மன்னார் பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் குறித்த நடமாடும் சேவையினை நேற்று காலை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நடமாடும் சேவையின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் நானாட்டன் பிரதேச செயலகத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன் , வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சுய தொழில்உதவித்திட்டங்கள், வரட்சி நிவாரணம் மற்றும் மாற்றாற்றல் கொண்டவர்களுக்கு சக்கர நாற்காலிகள் என்பவ வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவையின் போது மக்கள் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, ஓய்வூதிய சம்பளப் பிணக்குகள், சாரதி அனுமதிப்பத்திரம், மூக்குக்கண்ணாடி, ஆலோசனைச் சேவை, காணிப்பிணக்குகள், முதியோர் அடையாள அட்டை, உள்ளிட்ட பல்வேறுசேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், மக்களின் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மக்களுக்கு உரிய முறையில் அறிவித்தல்கள் வழங்கப்படாத நிலையில் குறித்த நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மக்களுக்கு உரிய வகையில் தெளிவூட்டல்களை மேற்கொள்ளாமையினால் மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேசத்தில்இடம் பெற்ற குறித்த நடமாடும் சேவையின் போது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த நடமாடும் சேவையின் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாத நீண்டநேரம் காத்து நின்று ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள் தெரிவித்தனர்.
எனவே மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்த்து வைக்க மேற்கொள்ளப்பட்டகுறித்த நடமாடும் சேவையின் போது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்தமை குறித்து மக்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.