தமிழ் தேசியக் கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு இன்று மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முகவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் இணைந்து வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒற்றுமையே பலம் என மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இவ்வளவு காலமும் ஆதரித்து வந்தனர்.
அந்த வகையிலே மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பார்கள். சில சலசலப்புக்கள் குடும்பத்திற்குள் இருக்கத்தான் செய்யும்.எனவே வெற்றி என்பது மக்களினுடைய பலமாகத்தான் இருக்கும் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.
மன்னார் நகர சபை உட்பட பிரதேச சபைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் செயற்படும். நல்லாட்சியை மக்களுக்கு நிச்சையமாக கொடுப்போம் என தெரிவித்தார்.