எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட தினத்தன்று நள்ளிரவுக்கு முன் மன்னார் மாவட்டத்தில் பாவனையாளர்களுக்கு எரிபொருட்களை விநியோகிக்காது பதுக்கி வைத்திருந்த மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் எரிபொருட்களின் விலை கடந்த வாரம் அதிகரிக்கப்பட்டது. எனினும் அதிகரிக்கப்பட்ட தினம் அன்று நள்ளிரவுக்கு முன் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் முதல் மடு வரையும் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் சுமார் 5 எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருட்கள் போதிய அளவு கையிருப்பில் இருந்தும் பாவனையாளர்களுக்கு வழங்காது பதுக்கி வைத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் அன்றைய தினம் பாதிக்கப்பட்ட பாவனையாளர்களினால் மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளுக்கு அன்றைய தினம் இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை தொடர்ந்து அன்றைய தினம் இரவு தலைமன்னார் முதல் மடு வரையும் உள்ள எரி பொருள் விற்பனை நிலையங்களை மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதன் போது ஒரு சில எரிபொருள் விற்பனை நிலையங்களில் போதிய அளவு எரிபொருட்கள் இல்லை.
ஏனைய 5 எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் போதிய அளவு எரிபொருட்கள் இருந்த போதும் அவற்றை பாவனையாளர்களுக்கு வழங்காது பதுக்கி வைத்திருந்தமை அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டு கண்டு பிடிக்கப்பட்ட குறித்த 5 எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக குறித்த அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.