Breaking
Sun. Nov 24th, 2024

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 13 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ள போதும் இதில் 4 மரணங்கள் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்றுள்ளது.

இந்த மரணங்களில் 3 பேர் தடுப்பூசி எதனையும் பெற்றுக் கொள்ளாத நிலையில் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(18) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 30 வயதிற்கு மேற்பட்ட 58 ஆயிரத்து 378 பேருக்கு முதலாவது கோவிட் தடுப்பூசியும், 44 ஆயிரத்து 588 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

முதலாவது தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 76 சதவீதமும், 2 ஆவது தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 55 சதவீதமும் நேற்று(17) மாலை வரை வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மொத்தம் 1330 கோவிட் தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1313 பேர் இவ்வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 979 பேர் புத்தாண்டு கொத்தனியுடன் தொடர்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். இந்த மாதம் மொத்தமாக 289 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று(17) மேலும் 43 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலும், 25 பேர் சமுதாயத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 25 பேர் அன்ரிஜன் பரிசோதனையின் போது கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் 13 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இதில் நான்கு மரணங்கள் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னரே இடம் பெற்றுள்ளது. இந்த மரணங்களில் 3 பேர் தடுப்பூசி எதனையும் பெற்றுக் கொள்ளாத நிலையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் இருப்பிடங்களிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவிற்குள் கோவிட் தடுப்பூசி வழங்கும் நிலையம் காணப்பட்ட போதும் அவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவில்லை. மரணித்த நான்காவது நபர் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

தற்போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் சுகாதார நடை முறைகளை பின் பற்றிக்கொள்ள வேண்டும்.

குணம் குறிகள் எதுவும் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று தங்களைப் பரிசோதித்துக் கொள்வதற்கான வசதிகள் மன்னார் வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கோவிட் தொற்றாளர்கள் போதுமான அளவு இடவசதி உள்ள காரணத்தினால் வீடுகளில் தங்க வைத்து சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றமையினால் மக்கள் தமக்கு எதுவும் குணம் குறிகள் காணப்பட்டால் எவ்வித அச்சமும் இன்றி சுகாதார வைத்திய அதிகாரி அல்லது அருகில் உள்ள வைத்தியசாலையினையோ நாட முடியும்.

தற்போதைய சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எவ்வித ஒன்றுகூடலையும் நடத்த முடியாது என்பதால் மக்கள் ஒன்று கூடலினை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொலிஸார் அல்லது சுகாதாரத் துறையினருக்குத் தெரியாமல் இரகசியமாக ஒன்று கூடுவதையும், நிகழ்வுகளை நடத்துவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.

பைஸர் தடுப்பூசியின் 2வது தடுப்பூசி முருங்கன் டொன் பொஸ்கோ தொழில் பயிற்சி நிலையத்திலும், மறுச்சிக்கட்டி அல் ஜஸீர் பாடசாலையிலும் நாளை வியாழக்கிழமை காலை முதல் வழங்கப்பட உள்ளது. இப்பகுதிகளில் 2 ஆவது தடுப்பு ஊசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் சென்று பெற்றுக் கொள்ள முடியும்.

மன்னார் நகரத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 2 ஆவது தடுப்பு ஊசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *