பிரதான செய்திகள்

மன்னாரில் 11 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட 11 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எம்.வை.எஸ்.தேசபிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், எந்தவொரு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

நேற்று  பிற்பகல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசுகையில்,

கடந்த 18ஆம் திகதி முதல் இன்று மதியம் வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. 11 அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழு ஒன்றும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதன்படி, மன்னார் நகர சபை மற்றும் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக்கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி), ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்ரீ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது மன்னார் நகர சபை உட்பட மன்னார், மாந்தை மேற்கு, முசலி ஆகிய உள்ளுராட்சி மன்றங்களிலும், தேசிய காங்கிரஸ் கட்சியானது, மன்னார் நகர சபை மற்றும் முசலி பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுகின்றன.

நல்லாட்சிக்கான தேசிய முன்னனி முசலி பிரதேச சபை உள்ளூராட்சி மன்றத்திலும், ஜே.நிர்மலராஜ் தலைமையில் சுயேட்சைக்குழு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலும், மக்கள் விடுதலை முன்னணி கட்சியானது நானாட்டான் பிரதேச சபை உள்ளூராட்சி மன்றத்திலும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.

Related posts

குருனாகல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் பிரிவை ஆரம்பித்து வைத்தர் ஹக்கீம் (படங்கள்)

wpengine

வவுனியாவில் நாளை கடையடைப்பு இல்லை இராஜலிங்கம்

wpengine

வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து நடவடிக்கை – விவசாய திணைக்களம்!

Editor