பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் தீ விபத்து மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

மன்னார் நகரில் விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அந்த விற்பனை நிலையத்தில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் நகர் பகுதியில் அமைந்துள்ள அபாஸ்ன் விற்பனை நிலையம் வழமை போல் இன்று இரவு மூடப்பட்டுள்ளது. எனினும் இரவு 9 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்தினுள் திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து, அருகில் உள்ள வர்த்தகர்களும், பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், குறித்த பகுதிக்கு மக்கள் செல்வதற்கு தடைவிதித்தனர். எனினும் நீண்ட நேரமாகியும் தீயை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

வர்த்தகர்களும், மக்களும் இணைந்து தீ ஏற்பட்ட குறித்த விற்பனை நிலையத்தின் பின் பகுதியில் இருந்து பௌசர் மூலம் கொண்டு வரப்பட்ட நீரை பயன்படுத்தி தீயை அணைக்க முற்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு மன்னார் நகர முதல்வர் ஞ.அன்ரனி டேவிட்சன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வருகை தந்தனர்.

மன்னார் நகர சபையின் பௌசர் வாகனம் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும் குறித்த விற்பனை நிலையத்தின் கீழ் பகுதி மற்றும் மேல் மாடியிலும் தீ பரவியது.

வவுனியா தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இரவு 10.30 மணியளவில் வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வருகை தந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் நீண்ட நேரத்தின் பின் குறித்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. குறித்த தீ பரவலின் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த தீப்பரவல் மின் ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட செயலா? என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த தீ பரவல் தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த விற்பனை நிலையத்திற்கு கணக்கு ஆய்வுக்குழுவினர் வருகை தந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் பின்னரே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் மன்னாரில் தீயணைப்பு பிரிவு இருந்திருந்தால் குறித்த தீப்பரவலை உடனடியாக கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related posts

நான் ஒரு வாரத்தில் எரிபொருள் விலை மக்களின் வரிச்சுமையை குறைப்பேன்

wpengine

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் விநியோகம்

wpengine

சாய்ந்தமருது பிரதேச சபை! இரு கட்சி தலைவர்களினால் மக்கள் வீதி செல்லும் நிலை

wpengine