இலங்கை மின்சார சபை ஊழியர்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடு தொடர்பில் மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்ட அறிவித்தல் விடுப்பதற்கு முன்பாக பொதுமக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என்று மின்சார சபை ஊழியர்கள் உறுதியளித்திருந்தனர்.
அத்துடன் பொதுமக்களின் மின்கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கையொன்றையும் தமது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான கோரிக்கையில் சேர்த்துக் கொண்டு தமது போராட்டம் பொதுமக்கள் நலன் சார்ந்தது என்பதைப் போன்ற தோற்றப்பாட்டையும் உருவாக்கியிருந்தனர்.
இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தின் மத்தியிலும் அத்தியாவசிய சேவையின் முக்கியத்தும் கருதி கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர்களை போராட்டக்காரர்கள் அங்கிருந்து மீள அழைத்துக் கொண்டுள்ளனர்.
நோயாளிகள் மற்றும் மருத்துவமனையின் நலனை முன்னிட்டு தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுமாறு மருத்துவர்கள் விடுத்த வேண்டுகோளையும் மின்சார சபை ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
மின்சார சபை ஊழியர்களின் மனிதாபிமானற்ற இச்செயற்பாட்டை மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வன்மையாக கண்டித்துள்ளார்.
எந்தவொரு கட்டத்திலும் மின்சார சபை ஊழியர்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்றும் அமைச்சர் சியம்பலாப்பிட்டிய உறுதிபடத் தெரிவித்துள்ளார்.