கட்டுரைகள்பிரதான செய்திகள்

மத நல்லிணக்கம் ஏன் இன்று அவசியம்? ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்.

(சூபா துல்கர் நயீம்)

இலங்கை பல்லின மக்கள் செறிந்துவாழ்கின்ற ஓர் பல்கலாச்சார பண்பாடுள்ளநாடாக காணப்படுகின்றது.

 

இங்கே வாழுகின்ற அனைத்து மக்களும் சுமூகமான சூழ்நிலை தனில் தங்களது வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கும் நின்மதியான சூழலில் மதங்களுக்கிடையே புரிந்துணர்வற்ற நிலை ஏற்பட்டிருப்பதானது கவலைதரும் ஒன்றாக காணப்படுகின்றது.

 

மனிதம் இங்கு மரணித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மத நல்லிணக்கம் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொண்டிருப்பது அவசியமானதொன்றாக இருக்கின்றது.

 

இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம்கள் பேரினவாத ஒருசில இனத்தலைவர்களால் வஞ்சிக்கப்படுவதும், முஸ்லிம்களின் உடைமைகள் அழிக்கப்படுவதும், அல்குர் ஆன் , ஹதீஸ்கள் பிழையாக போதிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

 

மத நல்லிணக்கம் பற்றி மிக அருமையாக கூறி அதன் வழி நடந்து காட்டிய மார்க்கம் இஸ்லாம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

 

ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார்கள் உள்ளனர்.அவற்றில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கின்றதோ அவருக்கு என்றார்கள். (நூல்:புகாரி-2259)

 

சுபஹானல்லாஹ். அண்டை வீட்டார் எந்த மதத்தினர் என்று நபி ஸல் அவர்கள் கேட்கவேயில்லை. மாறாக யாருடைய வாசல் நெருக்கமானதென கேட்டதிலிருந்து மதம் இங்கு முக்கியத்துவம் பெறவில்லை, அண்டை வீட்டார் எந்த மதத்தினராக இருந்தாலும் மிக அருகில் இருந்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.

 

அதேபோல் மற்றுமொரு ஹதீசினில் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டை வீட்டாருக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.

அறிவிப்பவர் –அபூ ஹுரைரா (ரலி) நூல் முஸ்லிம் (73)

 

மேலும் மற்றுமொரு ஹதீசினில் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்கு தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல் புகாரி (6018)

 

இஸ்லாத்தின் பார்வையில் அயலவர்கள் மூன்று வகையாக நோக்கப்படுகிறார்கள்.

  1. ஒரு கடமைக்குரிய அயலவர்கள்.
  2. இரண்டு கடமைக்குரிய அயலவர்கள்.
  3. மூன்று கடமைக்குரிய அயலவர்கள்.

 

  1. ஒரு கடமைக்குரிய அயலவர்கள் என்பது எமது வீடுகளுக்கு அருகாமையில் வசிக்கின்ற முஸ்லிம் அல்லாதவர்களை குறிக்கின்றது. இவர்களது இன்பம் துன்பம் இரண்டிலும் சமய பேதம் பாராமல் கலந்து கொள்வது ஒரு முஸ்லீமின் தார்மீக கடமையாகும். அதேபோல் தனது வீட்டில் சமைக்கின்ற உணவில் ஒரு பகுதியை வழங்குவது, விசேட விருந்துபசாரங்களில் அவர்களுக்கும் அழைப்பு விடுத்தல், குடும்ப நிகழ்வுகளில் அவர்களையும் சக பங்காளிகளாக கருதி பங்கு கொள்ளச் செய்தல் என்பன ஒரு கடமைக்குரிய அயலவன் என்பதில் உள்ளடங்குகின்ற அம்சங்களாக நவீன இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

 

  1. இரண்டு கடமைக்குரிய அயலவர்களை பொறுத்தவரை தமது வீட்டுக்கு அருகாமையில் வசிக்கின்ற உறவினர் அல்லாத முஸ்லிம்களைக் குறிக்கின்றது.

 

  1. மூன்றாவது கடமைக்குரிய அயலானை பொறுத்தவரை நமது வீடுகளுக்கு அருகாமையில் இருக்கின்ற முஸ்லிமான இரத்த உறவோடு தொடர்புபட்ட இன பந்துக்களை குறிக்கின்றது.

 

இதிலிருந்து அயலார் தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் முஸ்லீம்களுக்கிடையிலான உறவை கட்டி எழுப்பும் அதேவேளை சமகாலத்தில் சமாந்தரமாக முஸ்லீம் அல்லாதவர்களின் உறவையும் கட்டியெழுப்ப எமக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பதாக நவீன இஸ்லாமிய அறிஞர் கலாநிதி யூசுப் அல் கர்ழாவி அழுத்தமாக தெரிவிக்கின்றார்.

 

இவ்வாறாக அண்டை வீட்டாரை பேண வேண்டுமென குறிப்பிடுகின்ற இஸ்லாம் அது வழி நடந்து காட்டிய நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, இவையனைத்தும் உலக மக்களுக்கு மத நல்லிணக்கம் பற்றி புரிந்து கொள்வதற்கான அழகிய முன்மாதிரிகளாகும்.

 

ஆனால் இன்று மூவின மக்களும் சேர்ந்து வாழ்கின்ற நம் நாட்டினில் அண்டை வீட்டார்களினால் எப்போது ஆபத்து வரும் என்று பயந்து வாழ்கின்ற சூழ்நிலை காணப்படுவது இவர்களிடையே மத நல்லிணக்கம் பற்றிய புரிதலின்மையே காரணமாக இருக்கின்றது.

 

அது மட்டுமன்றி இஸ்லாம் மார்க்கத்தினில் எந்தவொரு வற்புறுத்தலும் இல்லை. இம்மார்க்கமானது எவரையும் வற்புறுத்தி தன்பால் அழைக்கவில்லை என்பதனை அல் குர் ஆன் 2:56 குறிப்பிடுகின்றது.

 

“இம்மார்க்கத்தினில் எந்தவொரு வர்புத்தலும் இல்லை, வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுத்தப்போகாத பலமான கையிற்றை பிடித்துக்கொண்டார். அல்லாஹ் செவியுற்றவான்”

 

மற்றுமொரு அல் குர் ஆன் வசனம் 1,2,3,4,5,6 “(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு. எனக்கூறுவீராக”

 

மற்றுமொரு சம்பவத்தினை நாம் பார்க்கும் போது நபியவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்கிறார்கள். அனைத்து இடங்களிலும் யூத மதத்தினை சேர்ந்தவர்களினால் பிரச்சினை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலைதனில் நபியவர்கள் பெரும் ஆன்மீக தலைவர்களாகவும் அரசியல் தலைவராகவும் காணப்பட்டார்கள். நபியவர்கள் யூத மதத்தை சார்ந்திருந்த இளைஞன் ஒருவனை தமது பணியாளர்களில் ஒருவராக நியமித்திருந்தார்கள்.

புகாரி 1356

 

புகாரி 1311, 1313 இல் பதிவாகியுள்ள மற்றுமொரு சம்பவம் யூத மதத்தினை சேர்ந்த ஒருவரின் சடலத்தினை கொண்டு செல்லும் போது நபியவர்கள் எழுந்திருந்து மரியாதையை செலுத்தினார்கள் என்று வருகின்றது.

 

மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு சரித்திர பிரசித்தி வாய்ந்த ஒப்பந்தமொன்றை அங்கு வாழும் குடிமக்களோடு மேற்கொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளும், உள்ளடக்கங்களும் முழுக்க முழுக்க சமைய நல்லிணக்கம், சகவாழ்வு, சமூகங்களுக்கிடையிலான உறவு பற்றி எமக்கு தெளிவாக வழி காட்டிக் கொண்டிருக்கின்றது. அதன் நிபந்தனைகளின் சுருக்கம் பின்வருமாறு.

 

  1. மதினாவில் வதியும் முஸ்லிம்களும் யூதர்களும் சமைய ரீதியில் வேறுபட்டிருந்தாலும் பொது வாழ்வில் ஒரே சமூகமாகவே கருதப்படுவர்.
  2. முஸ்லிம்கள் அவர்களது மார்க்கத்தை பின்பற்றுவதற்கும், யூதர்கள் அவர்களது சமயத்தை பின்பற்றுவதற்கும் இந்த ஒப்பந்தம் ஆதாரமாக அமையும்.
  3. பொது எதிரிகள் மதீனாவை தாக்க வந்தால் முஸ்லிம்களும் யூதர்களும் ஒரு சமூகமாக மாறி அவ் எதிரியை விரட்டியடித்து மதீனாவில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வர்.

 

மதீனாவில் முஸ்லிம்கள் 98%  ஆகவும் யூதர்கள் 2% ஆகவும் வாழ்ந்த சூழ்நிலையில் சிறுபான்மை யூதர்களை மதீனா ஒப்பந்தத்தின் மூலம் திருப்தி படுத்துவது மாநபியின் ஒரு அரசியல் வியூகமாகவே கருதப்படுகின்றது.

 

சமகால உலகில் அல்லல் படுகின்ற சிறுபான்மை மக்களின் சமைய சமூக கலாச்சார ஒரு மாதிரி தீர்வு திட்டமாக அன்றைய மதீனா ஒப்பந்தம் சான்று பகர்வதாக ஆய்வாளர் கலாநிதி ஹமீதுல்லாஹ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எனவே எமது நாட்டில் வாழுகின்ற அனைத்து மதத்தினரும் சாந்தியும், சமாதானத்துடனும் என்றென்றும் ஒற்றுமையுடன்  வாழ இவ் நோன்பு காலத்தினில் நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம். ஆமீன்!

Related posts

திரவியம் தேடும் திராவிடர்களின் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள்..!

wpengine

வட கொரியர்கள் ஐ.நாவின் கறுப்பு பட்டியலில்

wpengine

இறைவனே! இறைஞ்சிக் கேட்கிறோம்! மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜெ.எம்.பாயிஸ்!

wpengine