டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே மதுஷ், இலங்கை மற்றும் துபாயில் 23 வங்கிக் கணக்குகளில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வைப்பிலிட்டிருப்பதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மூலம் தெரியவந்துள்ளது.
ஹெரோயின், கொக்கைன் போன்ற போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் ஒப்பந்தக் கொலைகளை மேற்கொள்வதன் மூலம் பெருந்தொகை பணத்தை மாகந்துர மதுஷ் ஈட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஈட்டப்பட்ட வருமானத்தில் பெரும் பகுதியை கட்டடங்கள் கட்டுவதில் மதுஷ் முதலீடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மதுஷ் மற்றும் அவரின் சகாக்கள் துபாயில் கைதுசெய்யப்பட்ட பின்னர் நடத்திய விசாரணைகளில் மதுஷின் சகாவான கஞ்சிப்பானை இம்ரான், கொழும்பில் அமைக்கப்படும் பலமாடி கட்டடத் தொகுதியொன்றில் முதலீடு செய்திருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் தென்பகுதியில் மதஸ்தலமொன்றுக்கு கட்டடமொன்றை மதுஷ் நன்கொடையாகவும் வழங்கியுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.