(அனா)
கல்குடா எதனோல் தொழிற்சாலை அமைக்கும் பணியானது வாழைச்சேனை பிரதேச சபை அனுமதியின்றி இடம்பெறுவதாகவும், அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக பிரதேச சபை செயலாளர் மூன்று மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் அவ்வாறு வழக்குத் தாக்கல் இடம்பெற்றுள்ளதா? என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி நேற்று இடம் பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.
கோறளைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நேற்று திங்கள் கிழமை மாலை நடைபெற்ற போதே பிரதி அமைச்சர் மேற்படி கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் சார்பாக வருகை தந்த பிரதேச சபையின் பிரதிநிதி தனக்கு இது தொடர்பாக தெரியவில்லை என தெரிவித்ததுடன், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
கல்குடா கல்வி வலயத்தில் அதிகமான பாடசாலைகளுக்கு ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் சில ஆசிரியர்களை கொண்டு நடமாடும் கல்வியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும், இதனை நிறைவேற்ற வாகன வசதிகளை பெற்றுத் தருமாறு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி கேட்டுக் கொண்டார்.
இதற்கிணங்க பிரதேச அபிவிருத்தி நிதி மற்றும் அரச நிறுவனங்களின் உதவிகள் மூலம் வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேசத்தில் அதிக பனை மரம் வெட்டுப்படுவதை குறைத்துக் கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், வாழைச்சேனை பகுதியில் தமிழ் முஸ்லிம் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தனி இடம் இன்மையால் பிரச்சனைகள் இடம்பெறுவதால் தனித் தனி இடம் வழங்குமாறு சாரதிகள் கேட்டுக் கொண்டதற்கமைய உரிய அதிகாரி சமூகம் தராமையால் அடுத்த கூட்டத்திற்குள் இதற்கு உரிய நடவடிக்கை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் நி.இந்திரகுமார், அதன் உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராசா, பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எம்.சந்திரபால, திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.