(எம்.ரீ. ஹைதர் அலி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கோவில் குளம் கிராமத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் சகோதரர்கள் வசிக்கும் பகுதியொன்றில் இதுவரைகாலமும் வீதி அமைக்கப்படாத நிலை காணப்படுகின்றது. இதுமாத்திரமன்றி இக்கிராமத்திற்கு பல அத்தியாவசிய தேவைபாடுகள் இருந்தும் யாரும் கவனிக்காது புறக்கணிக்கப்பட்ட நிலையில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இன்றுவரை மணல் தரையாக காணப்படும் இவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து வருவதோடு, இப்பகுதிக்குரிய வீதி மற்றும் அதன் உள்ளக ஒழுங்கைகளும் இதுநாள் வரை சரியாக வரையருக்கப்படாமல் உள்ளதனால் இப்பகுதியை அடுத்துள்ள காணிகளுக்கு போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு பொது மக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து கடந்த மாதம் 05.08.2016ஆந் திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் குறித்த கிராமத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு வீதிகளை பார்வையிட்டதோடு, அப்பகுதி மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதுவிடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடந்த திங்கள் 05.09.2016ஆந்திகதி மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் அவர்களை குறித்த பகுதிக்கு அழைத்துவந்து மக்களின் நிலைமையினை தெளிவுபடுத்தியதையடுத்து உடனடியாக ஒரு சில நாட்களுக்குள் இப்பகுதியில் உள்ள ஒழுங்கைகளை அடையாளப்படுத்தி மரங்கள் மற்றும் புதர் காடுகளாக இருக்கும் ஒழுங்கைக்குரிய பகுதிகளை துப்பரவு செய்து தருவதற்கு மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் வாக்குறுதியளித்தார்.
தங்களது காணிகளினூடாக செல்லும் ஒழுங்கையின் பகுதிகளை அடையாளப்படுத்தி அப்பகுதிக்குள் காணப்படும் மரங்களை அகற்றுவதற்கு காணி உரிமையாளர்களான அப்பகுதி மக்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கும் சம்மதித்தனர். இதன் மூலம் இப்பகுதிக்கான வீதிகள் சரியாக அடையாளப்படுத்தப்பட்டு இப்பகுதியை அடுத்து இருக்கக்கூடிய ஏனைய குடியிருப்பு பகுதிகளுக்கும் மக்கள் இலகுவாக போக்குவரத்து செய்ய முடியுமாக இருக்கும். மேலும் இதன் மூலம் இதனை அடுத்துள்ள பகுதிகளுக்கான மின்சார கம்பங்களை இடுவதிலுள்ள சிக்கல் நீங்கி மக்கள் தமக்கான மின் வசதிகளை பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலும் மணல் தரையாக காணப்படும் இப்பகுத்திகான வீதிகளை அடுத்த வருட மாகாண சபை நிதி மூலம் குறைந்த பட்சம் கிரவல் இட்டு புனரமைப்பு செய்துதர நடவடிக்கை எடுப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வாக்குறுதியளித்தார்.