மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதன் உறுதிப் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட் அடிகளாரிடம் கையளித்துள்ளார்.
மன்னார் மாவட்டம் மடுப் பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.
சகல மத மக்களும் வழிபடும் பொது வழிபாட்டுத் தலம் என்ற மதிப்புக்குரியதாகவும் புனிதத் தன்மை கொண்டதாகவும் இத் திருத்தலம் போற்றப்படுகிறது.
தேவாலயத்தின் பெருநாட்களின் போது இலங்கை வாழ் மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் இடமாகவும் இத்தலம் விளங்குகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் பேர்டினன்ட் அடிகளாரிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.
இந்நிகழ்வில் பேராயர் இம்மானுவேல் பெர்னாண்டோ உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்களும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.