மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாதா கிராம அலுவலகர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ‘கிராமிய சுகாதார வைத்திய நிலையம்’ பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும் வெளவால்களின் உறைவிடமாக மாறியுள்ளதாக அந்த பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாதா கிராமத்தில் ஏற்கனவே காணப்பட்ட ‘கிராமிய சுகாதார வைத்திய நிலையம்’ மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினூடாக மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மாதா கிராமத்தில் உள்ள மாதர் சங்கத்தினூடாக குறித்த திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் கிராமிய சுகாதார வைத்திய நிலையம் அமைந்துள்ள பகுதி தற்போது பாரிய பற்றைக் காடுகளாக காணப்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த கிராமிய சுகாதார வைத்திய நிலையத்தின் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிக்கையில்
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாதா கிராமத்தில் ஏற்கனவே காணப்பட்ட ‘கிராமிய சுகாதார வைத்திய நிலையத்தை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையூடாக திருத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
குறித்த வைத்திய நிலையத்தினை இயங்க வைப்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைக் கொண்ட குறித்த கிராமிய சுகாதார வைத்திய நிலையம் வெகு விரையில் மடு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மாதம் ஒரு முறை கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வைத்திய பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள் திருத்தப்பணிகள் சில நிறைவடையவில்லை.
பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் உடனடியாக கர்ப்பிணி தாய்மர்களுக்கான வைத்திய பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.