அசாம் மாநிலத்தில் உள்ள 61 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இங்குவந்த பிரதமர் மோடி, இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
ராஹா மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பா.ஜ.க., வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
மோடி சவுதி அரேபியாவுடன் நட்பு வைத்துக் கொள்கிறார். ஐக்கிய அரபு அமீரகம், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் எல்லாம் நட்பாக இருக்கிறார் என்பதைப் பார்த்து இங்குள்ள சிலர் வெலவெலத்துப் போகின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
உலகில் உள்ள அனைவருடனும் நட்பை ஏற்படுத்திக் கொள்ள என்னால் முடியும் என்பதை அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மக்கா மண்ணில் எனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை கண்டு வெளியுலகிலுள்ள சிலருக்கு பிரச்சனையாக இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எனக்கு அங்கு அளிக்கப்பட்ட கவுரவம் இங்குள்ள சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது ஏன்? என்பதைத்தான் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் தேர்தல் பயத்தால் நடுக்கம் அடைந்துள்ள முதல் மந்திரி தருண் கோகாய், இங்குவந்து பிரச்சாரம் செய்து, தன்னை காப்பாற்றும்படி டெல்லி தலைவர்களை அழைத்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் அசாம் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமையலாம் என்ற ஒரு பேச்சு வலம் வந்து கொண்டுள்ளது. பின்னால் இருந்துகொண்டு ஆட்டுவிக்கும் ‘ரிமோட் கண்ட்ரோல்’ சக்தியை யாருக்கும் நீங்கள் கொடுத்துவிடக் கூடாது.
இம்மாநிலத்தின் ராஜ்யசபை எம்.பி.யும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், நாம் வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ள கூடாது, நமது செயல்கள் பேச வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். நமது செயல்கள் தற்போது உண்மையாகவே பேசி வருகின்றன. நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் இதுவரை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து மீதிபேரும் விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.