பிரதான செய்திகள்

மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கு மக்கள் நடமாட்டத்தையும் ஒன்றுகூடலையும் குறைப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.


இது தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்றிரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


“நாளை (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீதிமன்ற, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் சம்பந்தமாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


இன்று (16) ஒன்றுகூடிய நீதிச் சேவைகள் ஆணைக்குழு மார்ச் 17 முதல் 20 வரை மேற்கொள்ளப்படவுள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து சுற்றுநிரூபமொன்றை நீதிபதிகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.


வர்த்தக உயர் நீதிமன்றம், சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு அழைக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் திறந்த நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட மாட்டாது.


அவ்வழக்குகள் குறித்து ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வருகைதந்து பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.


அத்தியாவசிய மற்றும் அவசர முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழக்குகள் மட்டும் அந்தந்த நீதிபதிகளின் தற்றுணிபின் பிரகாரம் அழைக்குமாறு சுற்றுநிரூபத்தின் மூலம் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உயர்நீதிமன்ற மற்றும் நீதிவான் நீதிமன்றங்களுக்கும் இது ஏற்புடையதாகும் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


சிறைச்சாலை வளாகத்திலும் பொதுமக்கள் நடமாட்டம் இதன் கீழ் மட்டுப்படுத்தப்படும்.
வங்கி கொடுக்கல் வாங்கல்கள், வர்த்தக மற்றும் வாணிப நடவடிக்கைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கொரோனா ஒழிப்பு செயலணியின் பணிகள் இராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மாவத்தை 1090 என்ற இலக்கத்தில் உள்ள நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும்.


நாளாந்த மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பேணுவதற்கு அரசு முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.


உருவாகியுள்ள நிலைமையை சரியாக புரிந்துகொண்டு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கின்றது” – என்றுள்ளது.

Related posts

20ஆம் திருத்தம் ஆபத்தானது ராஜபக்ச ஒருநாளும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியாது

wpengine

லங்கா பிரீமியர் லீக் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஆரம்பமானது!

Editor

சட்டம் அமுலில் இருக்கும்போது பெற்றோர்கள்பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்

wpengine