துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
தற்போது மக்கள் எழுச்சி உக்கிரமடைந்துள்ளது. ஒவ்வொரு வினாடியும் அதன் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை இன்னும் தொடர அனுமதிக்க முடியாது. மக்களை திருப்தி செய்யும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும். மக்களை திருப்தி செய்ய டொலர் இருந்தால் மாத்திரமே சாத்தியம். அப்படியானால், மக்களை திசை திருப்பும் முயற்சியே சாதூரியமானது.
தற்போது அனைத்து கட்சிகளையும் இணைத்து, இடைக்கால அரசை அமைக்கவுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சர்வதேச கட்சி மாநாடு பிழையாக தெரிந்த விமலுக்கு, அனைத்து கட்சிகளையும் இணைத்த இடைக்கால அரசு சரியாக தெரிவது ஆச்சரியமிக்கது. சில நாட்கள் முன்பு ஜனாதிபதியோடு பாரிய முரண்பாடுள்ளதாக காட்டிய விமல், தற்போது அவரோடு சிறந்த உறவை பேணியவர் போன்று செயற்படுவது மேலும் சந்தேகத்தை வலுவாக்குகின்றது.
தற்போது பிரதான எதிர்க்கட்சியாக ஐ.ம.சவே உள்ளது. அதனை இணைக்காத இடைக்கால அரசு பயனற்றது. தற்போதைய சூழ்நிலையில் ஜே.வி.பியை இணைக்காத இடைக்கால அரசும் தேவையற்றது. அதற்கு நாட்டில் பெரும் ஆதரவுள்ளமை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் இரு அரசியல் கட்சிகளோடும் இது தொடர்பில் முறையாக பேச்சு வார்த்தை நடந்ததாக தெரியவில்லை. இவ் இரு கட்சிகளும் இதனை ஏற்குமா என்ற சந்தேகமும் உள்ளது.
இவ் இடைக்கால அரசின் பிரதமராக டலஸ் நியமிக்கப்படவுள்ளார் ( வேறு சிலரும் நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளது. அந்த பெயர்களும் மொட்டுவில் தேர்தல் கேட்டவையே ) . டலஸ் மொட்டுவின் நேரடி பா.உறுப்பினர்களில் ஒருவர். இடைக்கால அரசு அமையப்பெறுவதாக இருந்தால், அதில் பிரதமர் பதவியை வழங்க, ஐ.ம.சவில் ஒருவரே மிக பொருத்தமானவர். இவ்வாறான ஒரு நிர்ப்பந்த நிலையில் இரண்டாம் நிலை பதவி அதிக பா.உறுப்பினர்களை கொண்ட எதிர்க்கட்சிக்கே வழங்கப்பட வேண்டும். அது ஐ.ம.சக்தி என்பது யாவரும் அறிந்ததே!
டலசுக்கு பிரதமரை வழங்குவதன் மூலம் அவர்களுக்குள்ளேயே பிரதமர் பதவி பகிரப்பட போகிறது. இது ராஜபக்ஸ கட்சிக்கு இழப்பாக இருந்தாலும், அவர்களின் சொத்தான மொட்டு கட்சிக்கு சாதகமான தீர்மானம். வேண்டுமானால் ஐ.ம.சவினருக்கு ஒரு சில அமைச்சுக்கு கிடைக்கலாம். இது நாய்க்கு எலும்பு துண்டை வீசுவது போன்றானது. இதனை ஐ.ம.சக்தி ஒரு போதும் ஏற்காது. இன்று காலையில் வெளி வந்த ஒரு சில தகவல்கள் நிதியமைச்சை ஹர்ஸ டி சில்வாவுக்கு வழங்கவுள்ளதாகவும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி, பிரதமர் இன்றி நிதியமைச்சை மாத்திரம் வைத்துக்கொண்டு என்ன செய்வது?
தற்போதையை நிலையில் மொட்டணியினர் ஐ.ம.சவுக்கு பிரதமரை வழங்கினாலும், இணைவது பொருத்தமானதல்ல. நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தா இரிக்கையில், பிரதமரை வைத்துக்கொண்டு ஏது செய்திட முடியும். வெறும் அமைச்சை பெற்றுக்கொண்டு ஐ.ம.சவானது மொட்டோடு இணையாது. இணைந்தால், அது பாரிய தவறாக அமையும். தற்போது நடைபெறும் செயற்பாடு ராஜபக்ஸவினருக்கு ஒரு சிறிய பின்னடைவாக இருந்தாலும், அது அவர்களுக்கு சாதகமானதே!
மொட்டணியினர் எழுதிய திரைக்கதையில் விமல் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை உறுதிபட குறிப்பிட முடியும். பிரதமரை மாற்றியதும் பிரச்சினைகள் தீர போவதில்லை. தீரப் போவதான விம்பத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றார் விமல். இது மக்கள் எழுச்சியை ஒரு சிறிய காலத்திற்கு கட்டுப்படுத்தும். தலை போகும் நேரத்தில் பொருத்தமான உதவி. இதில் பெசிலை வெட்டும் பல காய்கள் நகர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய மேலதிக தெளிவுகளை, இது தொடர்பான ஐ.ம.ச மற்றும் ஜே.வி.பியின் தீர்மானங்களின் பின்னரே அறிய முடியும். இவ் இரு கட்சிகளும் நிராகரிக்கவே அதிக சாத்தியமுள்ளது. இவ் இரு கட்சிகளும் நிராகரித்தால், விமல் இராஜினாமா செய்வதற்கு முன்பு எந்த அமைச்சரவை இருந்ததோ, அதே அமைச்சரவையே மீண்டும் இருக்கும். இருப்பினும், காட்டப்படும் படம் வேறாக இருக்கும். இது மக்கள் எழுச்சியை திசை திருப்பும் கைங்கரியங்களில் ஒன்றாகவே தெரிகிறது. இதனை ஐ.ம.சக்தி ஏற்றால் சஜிதின் எதிர்காலம் சூனியமாகிவிடும்.