• பெரும்பாலான அரச ஊழியர்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள்…
• கண்காணிப்பு, ஆலோசனை மற்றும் ஊக்கம் மட்டுமே தேவை…
• மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் ஒரே அரச கொள்கையில் செயற்பட வேண்டும்…
ஜனாதிபதி தெரிவிப்பு……
பொதுச் சேவை மிகப்பெரியது. ஓர் அரச ஊழியர், மக்களின் ஒவ்வொரு தேவையிலும் தலையிடுகிறார். எனவே, அனைத்து அரச நிறுவனங்களினதும் பொதுச் சேவைகள் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பெரும்பாலான அரச ஊழியர்கள் வேலை செய்ய விரும்புகிறார்கள். கண்காணிப்பு, ஆலோசனை மற்றும் ஊக்குவிப்பு மூலம் அவர்களின் சேவைகளை நாடு முழுமையாகப் பெறுவதுதான் தேவையாகவுள்ளது. ஆளுநர்கள், அமைச்சுக்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தலைமைத்துவத்தை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்க நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் விஜயம் செய்து மேற்பார்வை செய்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஆளுநர்கள் உட்பட அரச அதிகாரிகள் தமது நிறுவனங்களுக்குச் சென்று அவர்களின் பணிகளை மேற்பார்வையிட்டு அனைத்து ஊழியர்களையும் ஊக்குவிப்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
மக்களை வாழ வைக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதற்கான சூழலைத் தயார்ப்படுத்த வேண்டும். அதிகாரிகளின் கடமை, பொறுப்பு, மனிதாபிமானம் என்பனவும் மிகவும் முக்கியமானவை ஆகும் என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் ஒரே பொதுக் கொள்கையில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.
பசுமை விவசாயம் என்பது அரசாங்கத்தின் முக்கிய திட்டமாகும். கிராமப்புற மக்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் மற்றும் 90 சதவீதம் விவசாயம் அல்லது அதைச் சார்ந்த வாழ்வாதாரங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலச் சந்ததியினரின் முன்னேற்றத்துக்காக இயற்கை விவசாயம் அவர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும் மற்றும் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். தரமான சேதனப் பசளைகளை உரிய நேரத்தில் விநியோகிப்பதன் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை அடைய முடியும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலு ஆதாரங்களை அதிகரிப்பதன் மூலம் தேசிய மின்சாரத் தேவைக்குப் பங்களிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை அடைவதற்கு உதவுமாறு அழைப்பு விடுத்தார்.
தன்னிறைவு வேலைத்திட்டத்தின் மூலம் உள்நாட்டுப் பொருளாதாரத்தை முகாமைத்துவப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
சேதனப் பசளைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மாகாண மட்டத்தில் மகிழ்ச்சியான அறுவடைக்கு வழிவகுக்க முடியும் எனவும் விவசாயிகளை முறையான வகையில் தெளிவுபடுத்துவதன் மூலம் விரும்பிய நோக்கங்களை அடைய முடியும் எனவும் ஆளுநர்கள் குறிப்பிட்டனர்.
பசுமை விவசாய வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதில் பெரும்போகத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை ஆராய்ந்து, சிறு போகத்தை வெற்றியடையச் செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள எதிர்காலத் திட்டங்களை இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். 25 மாவட்டங்களில் பயன்படுத்தப்பட வேண்டிய உரங்களை அடையாளம் காணும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் மண் பரிசோதனைக்குத் தேவையான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, கிராம மட்டத்தில் குறைபாடுகளை ஆராய்ந்துத் தகவல்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களினால் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஆளுநர்கள், அமைச்சுக்கள், மாகாண மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
23.02.2022