பொது மக்களின் உதவியுடன் தற்போதைய அரசாங்கத்தை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.
காலி, சமனல விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “தற்போது நாட்டிற்கு முதலீட்டார்கள்வருவதில்லை, மாறாக நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர். நாட்டில் தற்போது நிலவும் ஸ்தீரமற்ற நிலையே இதற்கு காரணம்.
தற்போதுள்ள அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் எப்போது முடிவிற்கு வருமென்றே முதலீட்டாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். அதன் பிறகு தாங்கள் நாட்டிற்கு முதலீடு செய்ய வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றார். இந்நிலையில், உங்கள் அனைவரது ஒத்துழைப்புடன் இந்த அரசை மிக விரைவில் வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை, இலங்கையை “ஐக்கிய தேசிய கட்சி பொலிஸ் இராஜ்ஜியம்” என்று தான் சொல்ல வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.