சிறுபான்மை சமூகத்தை புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர்,
எங்களைச் சுற்றியுள்ள காவியுடை தரித்தவர்கள் வன்முறைகளைத் தூண்டுகின்றவர்கள், முஸ்லிம்களைக் கொன்றொழிக்க வேண்டுமென்று சொல்பவர்கள், முஸ்லிம்கள் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்கின்றார்கள் என அநியாயமாக பழி சுமத்துகிறவர்கள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்காலத்திலே இந்நாட்டைப் பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தை அநியாயமாக கருத்து தோற்றுவிக்கின்றவர்கள் எல்லோரையும் தோற்கடிக்கின்ற பொறுப்பு முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது.
நாங்கள் எல்லோரும் எங்களுடைய ஈமானையும் எங்களுடைய பர்தாக்களையும், பள்ளிவாசல்களையும் சதிகார பௌத்த துறவிகளிடத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய தேவை எங்களுக்கிருக்கின்றது.
எனவே, விரைவில் நடக்கவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எல்லோரும் வீதிக்கு வந்தேயாக வேண்டியதொரு தேவைப்பாடு ஜனாதிபதித் தேர்தலிலே இருக்குமென நான் நினைக்கின்றேன்.
இந்த முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளி விட்டு ஒரு ஜனாதிபதி வர முடியாதென்கின்ற செய்தியை சிறுபான்மைச் சமூகமான தமிழ் சமூகத்தையும், கிறிஸ்தவ சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் புறந்தள்ளி விட்டு நூறு வீதம் பௌத்த வாக்குகளால் ஒரு ஜனாதிபதியாக வர முடியுமென மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் காண்கின்ற கனவுக்கு சாவு மணியடிக்க வேண்டிய பொறுப்பு இந்நாட்டிலே இருக்கின்ற ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் இருக்கின்றது.
அது போன்று இப்பிரதேசத்தில் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கும் இருக்கின்றது.
இதிலே மிகவும் தெளிவாக நீங்கள் இருந்து கொள்ளுங்கள். இதற்குள்ளே நீங்கள் வேறு விதமான கதைகளை பேசிக் கொண்டிருந்தால், வேறு கட்சி ரீதியான குரோதங்களை வளர்த்துக் கொண்டிருந்தால் அல்லது நாங்கள் அப்படி நடப்போம், இப்படி நடப்போமென்று பேசிக்கொண்டிருந்தால் தோற்கடிக்கப் போவது இந்நாட்டிலே இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
அதனோடு இணைந்து ஒட்டு மொத்த சிறுபான்மைச் சமூகமும் இந்நாட்டிலே மதிக்கப்படாது, தூக்கி எறியப்படுகின்ற அல்லது துரத்தப்படுகின்றவொரு சமூகமாக நாங்கள் மாற்றமடைந்து விடுவோம்.
இறைவன் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான தயார்ப்படுத்தல்களை முஸ்லிம் அரசியல் தலைவர்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
அப்பணியில் நாங்கள் உங்களை அழைப்பு விடுக்கின்ற போது நீங்களும் எங்களோடு சேர்ந்து தோளோடு தோள் சேர்த்து உழைக்க வேண்டும்.
பள்ளிவாசல் தலைவர்கள், பள்ளிவாசல்கள், நிறுவனங்கள் என்று இந்தப் பிரதேசத்தில் என்னென்ன அமைப்புக்களெல்லாம் இருக்கின்றதோ அந்த அமைப்புக்களெல்லாம் வீதியிலே இறங்கிப் பணியாற்ற வேண்டிய கால கட்டத்திலிருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டார குழு தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.