தனது இரண்டு மகன்களின் நடத்தைகள் மற்றும் பேச்சுக்களில் மாற்றங்களை கண்டதாக கொழும்பு ஷங்கீரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் தந்தையான செல்வந்த வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது மகன்கள் இப்படியான பெரிய அழிவை செய்வார்கள் என கனவிலும் நினைத்ததில்லை என்றும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரிடம் நடத்திய விசாரணைகளின் போது அவர் இதனை கூறியுள்ளதாக தெரியவருகிறது.
தனது இரண்டு மகன்மாரின் நடத்தையில் மாற்றத்தை கண்டு அவர்களை பல முறை எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட விசாரணை குழுவினர், இப்ராஹிமிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன்மாரிடம் பெருந்தொகை பணம் இருந்ததால், அவர்கள் இப்படியான பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்ராஹிம் தனது இரண்டு மகன்மார் மேற்கொண்ட பயங்கரவாத செயல் தொடர்பாக கடும் வெறுப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்சாப் அஹமட் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் ஆகியோர் கொழும்பில் இரண்டு ஹோட்டல்களில் தற்கொலை குண்டு தாக்குதல்களை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.