(முகம்மத் இக்பால் ,சாய்ந்தமருது)
கடந்த 29.10.2016ஆம் திகதி இறக்காமம் பிரதேசசபைக்குட்பட்ட மாணிக்கமடு என்னும் பிரதேசத்தில் அமைந்துள்ள மலையின்மேல் கௌதம புத்தரின் சிலை ஒன்று சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளினால் வைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்திலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அப்பிரதேச மக்களின் எதிர்ப்பு காரணமாக அன்று அது தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்ததானது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாணிக்கமடு பிரதேசமானது புத்தபெருமானை வணங்குவதற்கு பௌத்தர்களோ, அவர்களுக்குரிய காணிகளோ ஒருவீதமேனும் இல்லாத ஒரு பிரதேசமாகும். அதேநேரம், முஸ்லிம் மக்களுக்குரிய வயல் காணிகளையும், தோட்டங்களையும் மற்றும் தமிழர்களின் குடியிருப்புக்களையும் கொண்ட நூறுவீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமாகும்.
குறித்த சிலை வைக்கப்படுவதற்கு முன்பு இறக்காமம் பிரதேச செயலாளர் அவர்கள் நடக்கப்போகும் விபரீதங்களை அறிந்திருந்ததனால், ஒரு மக்கள் பிரதிநிதிக்கு விடயங்கள் எத்திவைக்கப்பட்டு அவ்விடத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அந்த அழைப்பினை அவர் அலட்டிக்கொள்ளவில்லை. அந்த பிரதிநிதி ஸ்தலத்துக்கு சென்றிருந்தால் சிலைவைப்பினை தடுத்திருக்கலாம் என்பதுதான் குறித்த பிரதேச செயலாளரின் வாதமாகும்.
அதேநேரம் இப்படி ஒரு சம்பவம் நடைபெறப்போகின்றது என்று கேள்விப்பட்டு நாவிதன்வெளியை சேர்ந்த, கிழக்கு மாகான சபை உறுப்பினர் கலையரசன் அவர்கள் ஸ்தலத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இருந்தும் அவர் ஒரு பார்வையாளராகவே இருக்கவேண்டிய நிலைமை அங்கு ஏற்பட்டது. அவரது உணர்வினை நாங்கள் பாராட்டியாக வேண்டும்.
இந்த சிலைவைப்பு விடயத்தில் தமிழ், முஸ்லிம் வேறுபாடுகள் இல்லாமல் இரு சமூகத்தவர்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த சம்பமானது சிங்கள பேரினவாதிகளினால் சிறிதளவேனும் எதிர்பாராத விடயமாகும். இந்த ஒற்றுமையை சிதைத்து முஸ்லிம்களுடன் தமிழர்கள் சேர்ந்துவிடாமல் பிரிக்கும் நோக்கில் “தமிழர்களின் கோவில்களை புனரமைப்பு செய்வதற்கு தான் நிதி பெற்றுத்தருவதாக” தமிழ் தரப்பிடம் கல்முனையின் பௌத்த பிரதம தேரர் அவர்கள் ஆசைவார்த்தை காண்பித்திருக்கின்றார். இருந்தும் அவரது ஆசைக்கு தமிழர் தரப்பு இணங்கவில்லை.
இவ்வளவு பாரியதொரு சம்பவம் நடைபெற்றிருந்தும் அருகிலிருந்த தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அந்த இடத்துக்கு செல்லவில்லை என்ற ஆதங்கத்தினாலும், கவலையுடனும் தனது அத்தனை வேலைகளையும் உதறித்தள்ளிவிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் உடனடியாக கொழும்பிலிருந்து குறித்த மாணிக்கமடு பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவ்வாறு தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் எவ்வளவோ தூரத்திலிருந்து ஸ்தளத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தும், தலைவருடனாவது இங்கிருந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் அந்த இடத்துக்கு செல்லவில்லை. இதன் மூலம் அவர்கள் சமூக உணர்வினை இழந்துள்ளார்களா அல்லது சிங்கள மேட்டுக்குடி நண்பர்கள் தங்களுடன் கோபித்துக்கொள்வார்கள் என்ற அச்சநிலையா என்று தெரியவில்லை.
தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் இங்கே வருகைதந்து சில அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டதுடன் பொலிஸ்மா அதிபருடனும், அதிகாரிகளுடனும் தொடர்புகொண்டு சட்டரீதியான நடவடிக்கைக்கு பணிப்புரை வழங்கியிருந்தார். அதற்கமைய சிலைவைப்புடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை வழங்கியிருந்தது.
இங்கே ஒரு விடயத்தினை நாங்கள் கவனிக்க வேண்டும் அதாவது இந்த பிரச்சினையில் குறித்த மாவட்டத்தினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் களத்துக்கு விஜயம் மேற்கொள்ளாது விட்டுருந்தால், முஸ்லிம் காங்கிரசின் எதிரிகள் முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைவருக்கும் எதிராக மட்டுமே வசைபாடி இருப்பார்கள்.
சுதந்திரத்துக்கு பிற்பட்ட இலங்கையின் கடந்தகால வரலாற்றினை எடுத்துக்கொண்டால் பௌத்த மேலாதிக்கத்தினை நிறுவும்பொருட்டு சிறுபான்மை சமூகமான தமிழர்களும், முஸ்லிம்களும் செறிந்துவாழும் வடகிழக்கு மாகாணங்களில் புத்தர் சிலையினை வைப்பதும், அரச மரக்கன்றுகளை நடுவதும், திருட்டுத்தனமாக புராதன கற்களை புதைத்துவிட்டு அது எங்கள் பிரதேசம் என்று உரிமை கோருவதும் பின்பு அதனை அண்டிய பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற சம்பவங்களாகும்.
தமிழர்கள் தங்களது உரிமைகளை பெறுவதற்காகவும், இருக்கின்ற தாயக நிலங்களை பாதுகாக்கவும் ஆயுத போராட்டத்தினை ஆரம்பித்தபோது இவ்வாறான சிலை வைப்புக்களும், அத்துமீறல்களும் குறிப்பிட்டளவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
சமாதான காலப்பகுதியில் தமிழர்களின் தாயக பிரதேசமான திருகோணமலை நகரின் மத்தியிலும், யுத்தம் முடிவுற்றதன் பின்பு முஸ்லிம்களின் தாயக பிரதேசமான பொத்துவில் பிரதேசத்தின் மண்மலை பகுதியிலும் ஒரு சிங்களவரும் வசிக்காத நிலையில், பௌத்த சிலை இராணுவ கட்டளை தளபதியின் தலைமையில் நிறுவப்பட்டது.
பாரிய எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அந்த சிலையை அகற்றுவதில் அரசாங்கம் சிறிதளவேனும் விட்டுக்கொடுக்கவில்லை. மாறாக கனரக ஆயுதங்களுடன் புத்தர் சிலைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் அன்று தேசியரீதியாக மட்டுமல்லாமல் சர்வதேசத்தின் கவனத்தினையும் பெற்றிருந்தது.
பின்னாட்களில் பொத்துவில் பிரதேச சிலைவைப்புடன் அதற்கான நிரந்தர கட்டடங்களும் கட்டப்பட்டு, சர்ச்சைக்குரிய இந்த கட்டடத்தினை நல்லாட்சியின் தலைவர் மைத்ரிபால சிரிசேனா அவர்கள் அண்மையில் திறந்துவைத்தார்.
இங்கு மட்டுமல்லாது யுத்தம் முடிவுக்கு வந்ததன்பின்பு வடமாகாணத்தின் நூறுவீதமாக தமிழர் வாழும் ஒவ்வொரு பிரதேசத்திலும் பரவலாக புத்தர்சிலைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கே பலாத்காரமாக வைக்கப்பட்டுள்ள எந்தவொரு புத்தர் சிலைகளிலும், வணக்க வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக பறவைகள் தனது இயற்கையை களித்து தங்களது வணக்கத்துக்குரிய புத்தரை அசிங்கப்படுத்துவதனை ஆங்காங்கே காணக்கூடியதாக உள்ளது. இதனை புத்தபெருமான் உயிரோடு இருந்திருந்தால் இவர்களை மன்னித்திருக்க மாட்டார்.
எனவே பௌத்தர்கள் இல்லாத பிரதேசத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவது பௌத்தர்களின் வணக்க வழிபாடுகளுக்காக அல்ல. மாறாக வடகிழக்கு மாகாணம் என்பது தமிழ்பேசும் முஸ்லிம், தமிழ் மக்களின் தாயகம் என்ற தோற்றப்பாட்டினை இல்லாமல் செய்து, தங்களது பௌத்த ராச்சியம் என்ற ஏகாதிபத்தியத்தினை நிலைநாட்டும் பொருட்டு மேற்கொள்ளப்படும் அரசியல் சிந்தனையாகும். இந்த விடயத்தில் மகிந்த என்றோ மைத்ரி என்ற வேறுபாடுகளோ கிடையாது. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதுதான் யதார்த்தமாகும்.