பெரிய நீலாவணையில் புதிய மதுபானசாலை – பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் உறுதி மொழி வழங்கிய எம்.ஏ.சுமந்திரன்
பெரிய நீலாவணையில் திறக்கப்பட்ட புதிய மதுபானசாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை பொதுமக்கள் நடாத்திய நிலையில் அவற்றை மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை கடந்த செவ்வாய்க்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் பொது மக்கள் இன்று (16) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட நிலையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன், பிரதேச செயலாளர் ரி.அதிசயராஜ் ஆகியோர் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மதுபான நிலையத்தினை மூட நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.குறித்த மதுபான நிலையம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவு ஒன்றிணை பெற்றுத்தர நடவடிக்கையெடுப்பதாகவும் பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் ஏற்கனவே ஒரு மதுபான சாலை இயங்கி வருகிறது. அதேவேளை கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று இவ்வருடம் பொதுமக்கள் பொது அமைப்புகள் ஆலய பரிபாலன சபையினர் பல்வேறு பட்ட எதிர்ப்புகளை தெரிவித்தும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்தும் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்புகள் தெரிவித்த போதும் இன்று காலை தொடக்கம் மதுபான சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.