(எம்.ஆர்.எம்.வஸீம்)
இலங்கை சுங்க துறையை முழுமையாக கண்காணிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாதவரை நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவதை தடுக்க முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
சுங்கப்பிரிவின் ஒருகொடவத்த கொள்கலன் பரிசோதனை தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 93 கிலோ கொக்கைன் போதைப்பொருள் 3 பிரயாண பொதியில் சாதாரணமாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை சுங்க துறை மற்றும் விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு பாதுகாப்பு கெமரா பொறுத்துமாறு நாங்கள் தொடர்ந்து கூறிவருகின்றோம். பாதுகாப்பு கமரா பொறுத்துவதன் மூலம் அங்கு நடக்கும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கலாம்.
மேலும் இலங்கை சுங்கத்துக்கு தெரியாமல் நாட்டுக்குள் போதைப்பொருள் வரமுடியாது. அவ்வாறு வருவதாக இருந்தால் அங்கு பாரியளவில் பணம் கைமாறப்பட்டிருக்கவேண்டும்.
அத்துடன் குறிப்பிட்ட கொள்கலன் ஒருகொடவத்தைக்கு கொண்டுவருவதற்கு முன்னர் துறைமுகத்தில் இருக்கும் ஸ்கேன் இயந்திரத்தில் பரிசோதிக்கப்படுகின்றது. அப்படியாயின் கொள்கலனில் சாதாரண பிரயாண பொதியில் இருந்த போதைப்பொருள் அந்த ஸ்கேன் இயந்திரத்தில் ஏன் தென்படவில்லை?
நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவதை தடுப்பதாக இருந்தால் இலங்கை சுங்க துறையை முழுமையாக புதுப்பிக்கவேண்டும். அத்துடன் சுங்கம் மற்றும் விமான நிலையத்தில் பாதுகாப்பு கெமரா பொறுத்தி அங்கு நடக்கும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவேண்டும் என்றார்.