கட்டுரைகள்பிரதான செய்திகள்

பொத்துவில் மாணவர்களுக்கு கானல் நீராகும் கல்வி

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ,சம்மாந்துறை)

“ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன (அபூதாவூத் 3634).இந்த நபிமொழியானது இஸ்லாம் கல்வி கற்பதற்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.கல்வி கற்பது ஒரு அமல் என்ற அந்தஸ்த்திற்கும் அப்பால் பலரது துஆக்களை பெற்றுக்கொள்ளச் செய்கிறது.

இவ்வாறான சிறப்பு மிகுந்த கல்வியை எமது சமூகம் ருசித்திடச் செய்ய அனைவரும் முயல வேண்டும்.பொத்துவில் கல்விப் பிரச்சினையை பொறுத்த மட்டில் முஸ்லிம் அரசியல் வாதிகளின் காத்திரமான நடவடிக்கைகளை அம் மக்கள் எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.எமது முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு வாக்கு ரீதியான அழுத்தங்களை வழங்குவதன் மூலம் மாத்திரமே எமது விடயங்களைச் சாதித்துக் கொள்ள முடியும்.இதனை நான் இங்கு கூறுவதற்கான காரணம் பொத்துவிலானது கல்வியில் மிகவும் பின் தங்கிக் காணப்படுகின்ற போதும் இது விடயத்தில் நாம் பொத்துவில் அமைப்பு உட்பட ஓரிரு நபர்களே போராடிக் கொண்டிருக்கின்றனர்.

விமல வீர திஸாநாயக்க 2015இல் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தை அமைக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சபையில் தனி நபர் பிரேரணை ஒன்றை நிறைவேற்றிருந்தார்.இதன் பிறகே பொத்துவிலுக்கான உப கல்வி வலயம் திறக்கப்பட்டிருந்தது.மேலுள்ள விடயம் அவ்  உப வலயம் என்பது பொத்துவிலுக்கான தனியானதொரு கல்வி வலயம் அமைக்கப்படும் வரையான தற்காலிகத் தீர்வாகுமென்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.பொத்துவிலில் ஒரு உப கல்வி வலயம் அமையப்பெற்றுள்ளமை அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் நிர்வாக இயலாமையை எடுத்துக் காட்டுவதோடு பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தின் அவசியத்தையும் உணர்த்தி நிற்கின்றது.

இவ் உப வலயத்தை பொத்துவில் மக்களுக்கு வழங்கிய விமல வீர திஸாநாயக்க மிக விரைவில் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்படும் என்ற உறுதி மொழியை வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.பொத்துவிலில் அமையப்பெற்றுள்ள காரியாலயம் உப வலயம் எனக் கூறப்பட்டாலும் ஒரு பெயரளவில் இயங்குவதாகவே கூறப்படுகிறது.பொத்துவிலின் ஆசிரியர் இடமாற்றம் உட்பட அனைத்து விடயங்களும் அக்கரைப்பற்று வலயத்தினாலேயே மேற்கொள்ளப்படுகிறது.பொத்துவில் நீர் வழங்கல் காரியாலயம்,பஸ் நிலையம்,பொத்துவில் வலயம் ஆகியன உப என்ற பெயர்களோடு இயங்குவது இங்கு சுட்டிக் காட்டத்தக்க ஒரு விடயமாகும்.பொத்துவில் அதிகமான மக்கள் தொகையையும் வளங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தும் பல விடயங்களில் உப என்ற சொல்லைத் தாங்கி நிற்பது அவமானத்திற்குரியது.

பொத்துவிலானது அறுபத்து மூன்று சிறிய கிராமங்களையும் இருபத்தேழு கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்ட ஒரு நகரமாகும்.இந் நகரத்திலுள்ள ஒரு பாசாலையில் கூட உயர் தர விஞ்ஞானத் துறையில் அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் ஆசிரியர்களில்லை.இரு பாடசாலைகளில் இரு வேறு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் உள்ளார்கள்.இவ்விரு பாடசாலை மாணவர்களையும் ஒரு இடத்தில் ஒன்று கூட்டி அவர்களுக்கான பாடங்கள் நடாத்தப்படுகின்றதாம்.பொத்துவில் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மட்டிட்டுக்கொள்ள இதனை விட எந்தச் சான்றும் தேவையில்லை.இரு ஆசியர்களை வைத்துக் கொண்டு ஒரு போதும் உயர் தரப் பிரிவை சீரிய முறையில் நடாத்த முடியாது.

பொத்துவில் மத்திய கல்லூரி மற்றும் பொத்துவில் இர்பான் வித்தியாலயம் ஆகிய இரண்டிலும் தலா இருபத்தைந்து ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது.பொத்துவிலிலுள்ள இருபத்தொரு பாடசாலையிலும் மொத்தமாக நூற்றியைம்பது ஆசிரியர் பற்றாக்குறை  நிலவுவதாக மாகாண கல்வித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது (தற்போது இவ் எண்ணிக்கை சிறு மாற்றத்திற்கு உட்படலாம்).இங்கு நாம் பல விடயங்களைச் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.இப்படியான நிலையில் இப் பாடசாலை இயங்கினால் நிச்சயம் சிறந்த தரமிக்க மாணவர்களை உருவாக்க முடியாது.குறைந்தது இப் பாடசாலைகளிலுள்ள வளங்களைப் பயன்படுத்தி உயர் தரத்திற்கு தகுதியான மாணவர்களைக் கூட தயார் செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது.சிறு வயதிலிருந்தே வெளியூர் சென்று படித்திட பொத்துவிலிலுள்ளவர்கள் கோடியில் புரள்பவர்களுமில்லை.சிறு வயதிலிருந்து தாய் தந்தையின் வழி காட்டலின்றி பயணிக்கும் ஒருவரின் நடவடிக்கை கேள்விக்குட்படுத்தக் கூடியதாகவே அமையும்.பொத்துவிலுள்ள விஞ்ஞான மற்றும் வணிகப் பிரிவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மருதமுனை,கல்முனை ஆகிய இடங்களை நாடிச் செல்வது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.ஒரு நகரத்தின் மாணவ சமூகம் பாழ் படுவது எமது சமூகத்தின் ஆரோக்கியமான பயணத்திற்கு சிறந்ததல்ல.பொத்துவில் மாணவர்கள் உயர் தர விஞ்ஞானப் பிரிவின் வளப் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு கலைத்துறையை தெரிவு செய்கின்றார்களாம்.இதன் காரணமாக எமது சமூகம் எத்தனை பொறியியலாளர்களை,வைத்தியர்களை இழந்திருக்கும்?

பொத்துவில் பிரதேச சபை பொத்துவிலுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் நோக்கில் பொத்துவிலிலுள்ள முப்பது தகுதியான நபர்களை இனங்கண்டு சில பின் தங்கிய பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடு படுத்திருந்தது.இதற்காக மாதமொன்று மூவாயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டிருந்தது.இது இரண்டாயிரத்து பதின் நான்காம் ஆண்டிலிருந்து ஒரு வருடம் நடைமுறையில் இருந்தது.தற்போது பிரதேச சபைகள் கலைக்கப்பட்டுள்ளதால் இதனை தொடர்ந்து கொண்டு செல்வது சவாலுக்குள்ளாகியுள்ளது.

ஒரு பிரதேச சபையின் இச் செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என்பதை யாராலும் மறுக்க முடியாது.இது தொடர்பில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் பாசித் அவர்களிடம் வினவிய போது பொத்துவிலுக்கு தனியானதொரு கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும் என உறுதியாக தெரிவித்ததோடு பொத்துவிலிலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு தனியான கல்வி வலயம் அமைப்பதில் விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்.இது தொடர்பிலான கூட்டங்களுக்கு பொத்துவில் பிரதேச பாடசாலை அதிபர்களை அழைத்தால் இரண்டு அல்லது மூவரே சமூகம் தருவார்கள் என மிகவும் கவலையுடன் தெரிவித்தார்.அதாவது இவ்விடயத்தை சரியாகக் கையாள்வதில் சரியான ஒத்துழைப்பில்லாமை இப் பிரச்சினை தொடர்ந்து செல்வதற்கான காரணங்களில் ஒன்றாகும்.இது தொடர்பில் அதிபர்கள் பின் தங்குவதற்கு பொத்துவில் பாடசாலை அதிபர்களில் பலர் உரிய கல்வித் தகமையின்றி அனுபவ ரீதியாக நியமிக்கப்பட்டுள்ளமையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

பொத்துவில் பிரதேசத்தில் நூற்றியைம்பது ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக மாகாண கல்வித் திணைக்களம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.ஆனால்,அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அக்கரைப்பற்று வலயத்தில் எந்த விதமான ஆசிரியர் பற்றாக்குறையுமல்ல எனக் கூறியுள்ளார்.இங்கு தான் சில சந்தேகங்கள் எழுகின்றன.எனக்குத் கிடைத்த தகவல்களின் படி அக்கரைப்பற்றில் மிகை ஆசிரியர்கள் காணப்படுவதாகவும்,பொத்துவிலில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது என்ற கருத்து எழும் போது அக்கரைப்பற்று ஆசிரியர்கள் பொத்துவிலுக்கு இடமாற்றப்படும் நிலை உருவாகும் என்பதால் இதன் உண்மைத் தன்மை மறைக்கப்படுவதாகவும் அறியக்கிடைத்தது.தற்போது அக்கரைப்பற்றிலுள்ள சில பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை எழுந்துள்ளதாக அறிய முடிகிறது.பாலமுனையிலும் சில நாட்கள் முன்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இவ்வாறான பிரச்சினைகளுக்கு தற்போது கற்பித்தலுக்கு பொருத்தமற்ற ஆசிரியர்கள் அதிகமாக இருப்பதும் பிரதான காரணமாக முன் வைக்கப்படுகிறது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் அக்கரைப்பற்றிலிருந்து  பொத்துவிலுக்கு இடமாற்றப்படவிருந்த ஐம்பது ஆசிரியர்களை மாகாண சபை உறுப்பினர் தவம் தடுத்து நிறுத்திருந்தார்.இந்த இடமாற்றம் மாகாண சபை உறுப்பினர் தவத்தின் ஆதரவாளர்களை குறி வைத்து அங்குள்ள அரசியல் வாதி ஒருவரால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதால் இதில் தவம் தனது மூக்கை நுழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தவம் பக்கத்திலும் ஒரு நியாயம் சுற்றித் திரிகிறது.இங்கு ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளலாம்.அச் சந்தர்ப்பத்தில் ஐம்பது ஆசிரியர்களை பொத்துவிலுக்கு வழங்குமளவு அக்கரைப்பற்றில் மிகை ஆசிரியர்கள் இருந்துள்ளார்கள் என்பதாகும்.இதன் பிற்பாடு இருப்பத்தைந்தளவிலான ஆசிரியர்களே இடமாற்றப்பட்டிருந்தனர்.

இங்கு பொத்துவில் நகரத்திற்கான புறக்கணிப்பு நிகழ்ந்துள்ளமையை அறிந்து கொள்ள முடிகிறது.பொதுவாக அரசியல் பழி வாங்கலுக்கு உட்படும் ஆசிரியர்களையே பொத்துவிலிற்கு இடமாற்றம் செய்தனுப்பும் குற்றச் சாட்டும் பொத்துவில் மக்களிடமிருந்து வருகிறது.

இப்படி வருபவர்கள் வரும் வேகத்திலேயே வேறு அரசியல் அழுத்தங்களைப் பயன்படுத்தி திரும்பிச் செல்கின்றார்களாம்.அக்கரைப்பற்றில் இரு பக்க அரசியலும் பலமாக இருப்பதும் அக்கரைப்பற்று ஆசிரியர்களை பொத்துவிலிற்கு இடமாற்றுவது மிகவும் சிரமமாக அமைவதாக சிலர் கருதுகின்றனர்.குறிப்பாக வலயத்தில் காணப்படும் பிரச்சினையை குறித்த வலயம் தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.சம்மாந்துறை வலயத்தினுள் அடங்கும் இறக்காமத்தின் ஆசிரியர் பிரச்சினைக்கு சம்மாந்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் நிர்பந்தமான முறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.இப்படியாக நிர்ப்பந்தித்து அக்கரைப்பற்று வலயத்திலிருந்து பொத்துவிலுக்கு ஆசிரியர்கள் அனுப்பப்படவில்லை.கடந்த வருடம் வெளியாகிய கல்வியல் கல்லூரி மாணவர்களைக் கூட அக்கரைப்பற்று வலயம் உள் வாங்கி பொத்துவில் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லை.இதன் போது நாம் பொத்துவில் அமைப்பு ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்ததன் பிற்பாடு இருபத்தொன்பது ஆசிரியர்கள் பொத்துவிலுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

என்னைப் பொறுத்த மட்டில் இது விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் காத்திரமான நடவடிக்கை எடுத்ததாக அறிய முடியவில்லை.அதற்காக முற்றாக முஸ்லிம் அரசியல் வாதிகள் இது விடயத்தில் எதனையும் செய்யவில்லை என்றும் பழி போடவில்லை.இதுவரை இது தொடர்பில் நான்கு பிரேரணைகள் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.முதலாவது பிரேரணை எஸ்.எஸ்.பி மஜீதும்,இரண்டாவது பிரேரணையை விமல வீர திஸாநாயக்கவும் (அந் நேரத்தில் விமல வீர திசாநாயக்க கல்வி அமைச்சராக இருந்தார்),மூன்றாவது பிரேரணையை உதுமாலெப்பையும்,நான்காவது பிரேரணையை ஜவாதும் கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த பிரேரணையை கொண்டு சென்ற நபர்களை வைத்தும் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம்.அதாவது இவ்வலயத்தை அமைப்பதில் பேரின வாத எதிர்ப்புகளில்லை என்பதை விமல வீர திஸாநாயக்க தனி நபர் பிரேரணையை கொண்டு சென்றமையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.இது தொடர்பில் தனி நபர் பிரேரணையைக் கொண்டு சென்ற ஏனைய மூவரும் மூன்று கட்சியைச் சேர்ந்தவர்கள்.பொத்துவில் மக்களது பிரச்சினை கட்சி வேறு பாடுகளுக்கு அப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இப் பிரேரணைகள் எதுவம் ஆளுனர் ஒப்பத்தை உள் வாங்கிச் மத்திய அரசுக்கு இது வரை அனுப்பப்படவில்லை.கிழக்கு மாகாண சபை மு.காவின் கட்டுப்பாட்டிலல்லவா உள்ளது?

பொத்துவிலிற்கு தனி வலயம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கல்முனை தமிழ் வலயத்தை உருவாக்குவதற்கு தமிழ் அரசியல் வாதிகள் முயற்சிக்கின்றனர்.எரிகின்ற வீட்டில் பிடுங்கிய இலாபம் காண தமிழ் அரசியல் வாதிகள் விளைவது கண்டிக்கத்தக்கதொரு செயலாகும்.இருபத்தொரு பாடசாலைகலைக் கொண்ட பொத்துவிலுக்கு ஒரு தனி வலயம் அமைக்கப்பட வேண்டுமாக இருந்தால் அறுபத்தைந்து பாடசாலைகளைக் கொண்டுள்ள கல்முனை தமிழ் வலயம் உருவாக்கப்படல் வேண்டுமென்ற நிபந்தனையை அவர்கள் முன் வைத்துள்ளார்கள்.இதற்கு முஸ்லிம் அரசியல் வாதிகள் உடன் பட மறுப்பதாலேயே இப் பிரச்சினை இவ்வளவு தூரம் இழுபட்டுக்கொண்டிருப்பதாகவும் ஒரு கதை சிலாகிக்கப்படுகிறது.முதலமைச்சு மு.காவிடம் இருந்தாலும் கல்வி அமைச்சு த.தே.கூவிடம் உள்ளது.கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சரால் அமைச்சரைவைப் பாத்திரத்தைச் சமர்ப்பிக்க முடியாது.இது விடயத்தில் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணியே அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க முடியும்.இங்கு தான் அவர்கள் தங்களது கல்முனை தமிழ் வலய முடிச்சை இறுக்கிப் பிடிக்கின்றனர்.

இது தொடர்பில் 2011ம் ஆண்டு காலப்பகுதியில் எஸ்.எஸ்.பி மஜீதினால் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது அப் பிரேரணையானது ஏகமானதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.இக் காலத்தில் மு.கா எதிரணியில் அமர்ந்திருந்ததால் இப் பிரேரணையின் விடயத்தில் அதன் மீது குற்றம் சாட்ட முடியாது.இந்த பிரேரணை தொடர்பில் கிழக்கு மாகாண சபை எதுவித நடவடிக்கையும் எடுக்காதது தொடர்பில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அணியினர் பொறுப்புச் சொல்லியே ஆக வேண்டும்.2015இல் விமல வீர திஸாநாயக்க சேவா லங்கா மஜீதின் வேண்டுகொளிற்கமைய இது தொடர்பில் பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றிய போது மு.கா கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்காளிக்கட்சியாக இருந்தது.இதன் போது மு.கா உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பொத்துவிலுக்கான தனி வலயம் கிடைத்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.தற்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சை தமிழர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் தடுக்கின்றார்கள் எனக் கூறுவது மு.காவின் அரசியல் இயலாமையும் தூர நோக்கற்ற சிந்தனையையும் எடுத்துக்காட்டுகிறது.கடந்த தேசிய அரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையில் மு.காவும்,த.தே.கூவும் இணைந்து ஆட்சியமைத்தது.இவ் ஆட்சி அமைப்பின் போது த.தே.கூ கல்வி அமைச்சை தங்களுக்கே தர வேண்டுமென மிகவும் வற்புறுத்தி தன் வசப்படுத்திருந்தமை இங்கு நினைவுபடுத்தத்தக்கது.

தனியான கல்வி வலயம் அமைக்கும் விடயமானது மத்திய அரசில் தங்கிருக்கும் ஒன்றாகும்.வேண்டுமானால் கிழக்கு மாகாண சபை ஒரு பரிந்துரையை மாத்திரமே செய்ய முடியும்.அதாவது இதனைச் சாதிக்க கிழக்கு மாகாண சபையையும் தாண்டிய அரசியல் செல்வாக்கு தேவைப்படுகிறது.முன்னாள் கல்வி அமைச்சராக பந்துள குணவர்த்தன இருந்த போது பொத்துவில் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இரு வாரங்களுக்குள் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் இவ் விடயத்தில் சிரத்தை எடுத்திருந்தால் மிக இலகுவில் அதனை சாதித்திருக்க முடியும்.குறித்த நிகழ்வில் ஒரு முக்கிய அரசியல் வாதிக்கு உரிய கௌரவம் வழங்கப்படாமையினால் இதனை தடுத்து நிறுத்தியதாகவும் கதைகள் அடிபடுகிறது.

பொத்துவிலில் மொத்தம் இருபத்தொரு பாடசாலைகள் மாத்திரமே இருப்பதால் மிகச் சிறிய கல்வி வலயம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி சிலர் இம் மக்கள் கோரிக்கையை மழுங்கடிக்க முயல்கின்றனர்.இப்படியான குற்றச் சாட்டு நிலவுகையில் இரண்டு பாடசாலைகள் கடந்த வருடம் பொத்துவிலில் உப வலயத்தை அமைக்கும் நோக்கில் திறக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.அக்கரைப்பற்றில் மொத்தம் இருபத்து மூன்று பாடசாலைகளே உள்ளன.இருபத்து மூன்று பாடசாலைகளைக் கொண்ட அக்கரைப்பற்றுக்கு ஏனைய ஊர்களைச் சேர்ந்த பாடசாலைகளை இணைத்து தனியான கல்வி வலயத்தை வழங்க முடியுமாக இருந்தால் ஏன் பொத்துவிலிற்கு வழங்க முடியாது என்ற வினா? எழலாம்.இந்த வினாவிற்கு நேர்,எதிர் இரு விடைகள் உள்ளன.மக்கள் தொகையில் அக்கரைப்பற்று பொத்துவிலை விடவும் இரு மடங்களவில் உள்ளது.அக்கரைப்பற்றை விட பொத்துவில் பரப்பில் பெரியது.எதிர்காலத்தில் மக்கள் குடியேற்றம் பொத்துவிலில் அமையப்பெறும் போது பொத்துவிலில் மக்கள் தொகை வெகுவாக அதிகரிக்கும்.இன்று பொத்துவிலின் மக்கள் தொகையை சிறிதாக வைத்து இக் கோரிக்கியை மழுங்கடித்தாலும் இப் பிரச்சினை மீண்டும் எப்போதோ ஒரு நாள் எழும் என்பதில் ஐயமில்லை.

சிலருடைய கருத்தின் படி பொத்துவில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்டுள்ள தமிழ்,சிங்களப் பாடசாலைகளை உள் வாங்குவதன் மூலம் பொத்துவில் வலயத்தை அமைப்பதிலுள்ள பாடசாலைகள் குறைவு என்ற பிரச்சினையை நிவர்த்திலாம் எனக் கூறுகின்றனர்.இதற்கு சில நியாயங்களும் உள்ளன.பானம மற்றும் லகுகல ஆகிய இடங்களிலுள்ள பாடசாலைகள் அம்பாறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழே உள்ளது.ஏதாவது ஒரு தேவைக்கு இவர்கள் சுமார் நூறு கிலோ மீட்டரிற்கும் அதிகமான தூரம் பயணம் செய்ய வேண்டும்.இப் பாடசாலைகளை உள் வாங்கி பொத்துவிலிற்கென்று தனி வலயம் அமைக்கப்படுமாக இருந்தால் இவர்கள் தங்களது காரியங்களை காலடியில் சாதித்துக்கொள்ள முடியும்.

பானம,லகுகல ஆகியவற்றில் உள்ள சிங்கள பாடசாலைகள் பொத்துவிலின் ஆதிக்கத்தின் கீழ் வருமா? என்பது தான் இங்குள்ள வினா.பொதுவாக வலயக் கல்வி அலுவலகம் அமைப்பதில் இன ரீதியான நிலத்தொடர்பற்ற வகையில் பாடசாலைகளை இணைக்கும் வழமை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.பாலமுனைக்கும் ஒலுவிலுக்கும் இடையில் அமைந்துள்ள திராய்க்கேனியில் உள்ள தமிழ் பாடசாலையொன்று திருக்கோவில் வலயத்தில் உள்ளமை,அக்கரைப்பற்றில் உள்ள சிங்கள பாடசாலை அம்பாறை வலயத்தில் உள்ளமை,அக்கரைப்பற்று வலயத்தினுள் பொத்துவிலிலுள்ள பாடசாலைகள் காணப்படுகின்றமை இவற்றிற்கான சான்று.இப்படி இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் எப்படி இலங்கையில் இன ரீதியான நல்லுறவு ஏற்படப்போகிறது என்பதும் இவ்விடத்தில் சிந்திக்கத்தக்கதொரு விடயமாகும்.இதிலிருந்து நான் கூற வரும் விடயம் பானம,லகுகல ஆகியவற்றை இணைக்கத் தான் வேண்டும் என்று யாரும் நிர்ப்பத்திக்க முடியாது.அவர்கள் விரும்பினால் மாத்திரமே இணைக்கலாம்.இன்று நிலவும் இனவாதத்தின் முன் அவர்கள் விரும்பினாலும் இணைப்பது அவ்வளவு இலகுவில் சாத்தியப்படாது என்பதே உண்மை.

பாடசாலை குறைவு என்பதெல்லாம் ஒரு குற்றச் சாட்டே அல்ல.ஒரு வலயத்தை அமைக்க இத்தனை பாடசாலைகள் தான் இருக்க வேண்டும் என்ற வரையறை எங்குமில்லை.மஹாஓயா கல்வி வலயம் ஐயாயிரத்து நாற்பத்தைந்து அளவிலான மாணவர்களுடன் அமைக்கப்பட்டுள்ள போது எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுள்ள இவ் வலயத்தை அமைப்பதில் என்ன இடர்பாடுள்ளது.இவர்கள் கோருவது போன்று ஏனைய சில ஊரார்களும் வலயம் கேட்டால் எவ்வாறு மாகாண சபை நிதியைக் கையாள்வது என்ற ஒரு பிரச்சினையும் உள்ளது.பொத்துவிலுக்கும் அக்கரைப்பற்றுக்குமிடையில் சுமார் நாற்பத்தாறு கிலோ மீட்டர் தூரமுள்ளது.கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான தூரமுள்ள பிரச்சினையை காரணம் காட்டி ஒரு வலயக் கல்வி அலுவலகம் கோரும் நிலை எங்குமில்லை.அதாவது பொத்துவில் மக்களின் பிரச்சினைக்கு ஏனையோரைக் காரணம் காட்டி முழுக்கு போட முயல்வது சரியான வாதமல்ல.பொத்துவில் மக்கள் திருக்கோயில் எனும் வலயத்தைத் தாண்டியே அக்கரைப்பற்று வலயத்தில் தங்களது தேவைகளை நிவர்த்திக்கும் நிலையுள்ளது.பொதுவாக நிலத்தொடர்பற்ற முறையில் இணைக்க முயலும் போது குறித்த பிரதான பிரதேசத்துடன் இணையும் ஏனைய பிரதேசங்களின் விருப்பத்துடனே இணைக்கப்படல் வேண்டும்.இங்கு அக்கரைப்பற்றுவுடன் பொத்துவில் இணைய விரும்பாததால் இவ்வாறான இணைப்பு ஆரோக்கியமானதல்ல.

பொத்துவிலுக்கு ஒரு தனியான வலயத்தை வழங்கினால் அவர்களது ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் இதர சில பிரச்சினைகள் நிவர்த்திக்கப்பட்டுவிடும் என நினைப்பது பிழையானதொரு சிந்தனையாக நான் கருதுகிறேன்.பொத்துவில் மண் தனக்கு தேவையான ஆசிரியர்களை தன்னகத்தே கொண்டிருக்காமையை பொத்துவில் மக்கள் கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.தற்போது அக்கரைப்பற்றைச் சேர்ந்த நாற்பது ஆசிரியர்கள் பொத்துவிலில் உள்ளனர்.இவர்களில் தொண்ணூற்றைந்து சதவீதமானவர்கள் இளம் வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொத்துவிலுக்கு தனியான வலயம் அமைக்கப்படும் போது அக்கரைப்பற்று ஆசிரியர்களை அக்கரைப்பற்று வலயத்தினுள் உள் வாங்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இதன் காரணமாக பொத்துவிலுக்கான தனியாய வலயம் அமைக்கப்படும் போது சில வேளை தற்போதுள்ளதையும் விட மிகை ஆசிரியர் பற்றாக்குறை நிலவவும் வாய்ப்புள்ளது.பொத்துவில் மக்கள் தங்களது ஊருக்குத் தேவையான ஆசிரியர்களை தங்களது ஊரில் உருவாக்கிக் கொள்ளும் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவர்களின் மீது தலையாய கடமையாகும்.இலங்கை அரசு இலங்கையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் பொருட்டு இருபத்து மூவாயிரம் பேரை ஆசிரியர் சேவையினுள் உள் வாங்க முடிவு செய்துள்ளது.இத் திட்டத்தை அரசு செயற்படுத்தும் போது பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறை உட்பட பல இடங்களிலுள்ள ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிவர்த்திக்கப்படுமென நம்பப்படுகிறது.

 

 

Related posts

தேர்தலின் பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

wpengine

காத்தான்குடி பொலிஸ் பிரில் சட்டவிரோத மண் அகழ்வு

wpengine

பகிரங்க மடலுக்கு அமீர் அலியின் பதில்

wpengine