இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்று அமெரிக்கா தூதுவராலயம் அபாய அறிவிப்பு விடுத்துள்ளமை முழுப் பொய்யாகும். இது திட்டமிட்ட சூழ்ச்சியாகும்.
இலங்கை முஸ்லிம்களின் வீடுகளையும் பள்ளிவாசல்களையும் பாதுகாப்புத் தரப்பினர் சோதனையிடுவதற்கான முன்னேற்பாடாகும். பொதுபலசேனா அமைப்பும் இதன் பின்ணியில் செயற்படுகிறது என ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் வட்டரக் விஜித்த தேரர் தெரிவித்தார்.
இலங்கையின் ஐ.எஸ். தீவிரவாதம் காலூன்றியிருக்கிறது. அவர்கள் அமெரிக்கத் தூதுவராலயத்தை தாக்கத் திட்டமிட்டுள்ளார்கள் என அமெரிக்கத் தூதுவராலயம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்;
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்ற பொய் புரளியைக் கிளப்பி அமெரிக்கா இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முஸ்லிம்களையும் இலங்கையிலிருந்து அரபு நாடுகளுக்குச் செல்லும் முஸ்லிம்களையும் பிரச்சினைகளுக்குள்ளாக்க சூழ்ச்சி செய்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற போர்வையில் பாதுகாப்புத் தரப்பினர் பள்ளிவாசல்களையும் அரபு மத்ரஸாக்களையும் தேடுதல்களுக்குட்படுத்தும் திட்டமே இதுவாகும்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை முஸ்லிம்களைப் பலவீனப்படுத்தும் நோக்கோடு பொதுபலசேனா பின்னணியிலிருந்து செயற்பட்டு வருகிறது.
இலங்கையில் ஏதும் அசம்பாவிதங்கள் ஐ.எஸ். என்ற போர்வையில் நடந்தால் அதற்கு பொதுபலசேனா அமைப்பே பொறுப்பேற்க வேண்டும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளும் முஸ்லிம்களுக்கு எதிரானவையாகவே அமைந்துள்ளன என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.