வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் 20 வயதிற்கு குறைந்த பட்மின்டன் பூப்பந்தாட்ட வீரர் வீராங்கனைகளை ஒன்றிணைத்து உலக தமிழ் பூப்பந்து பேரவையின் (WTBF) அனுசரணையுடன் மன்னார் மாவட்டத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் இரண்டு தினங்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் 20 வயதின் கீழான வடமாகாண பூப்பந்து அணியை உருவாக்கும் செயல்திட்டமும் 18/02/2017 சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு அரங்கின் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் இவ் விசேட பயிற்சி பட்டறைக்காக கனடாவில் இருந்து உலக தமிழ் பூப்பந்து பேரவையின் (WTBF) சார்பாக வருகை தந்த ஜெயகாந்தன் அவர்களும் மன்னார் மாவட்ட பூப்பந்து சங்கத்தின் தலைவர் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த பயிற்சி பட்டறையில் வடக்கு மாகாணம் தழுவியதாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர் அத்தோடு இதில் இருந்து உருவாகும் வடக்கு அணியினர் எதிர்வரும் ஆடி மாதம் கனடாவில் நடைபெறவுள்ள பூப்பந்து சுற்றுப்போட்டிக்கு செல்லவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் இந்த பூப்பந்து பயிற்சி பட்டறைக்கு வருகைதந்துள்ள அனைத்து மாணவர்களையும் பாராட்டி கிடைக்கப்பெற்றுள்ள சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்தி எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளுங்கள் என்று வாழ்த்துக்கள் கூறியதோடு குறிப்பிடட நிகழ்வை ஏற்பாடு செய்த வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

அத்தோடு விசேடவிதமாக கனடாவில் இருந்து வந்துள்ள பயிற்சியாளரை பாராட்டியதோடு இதுபோல பொது நோக்கோடு செயல்படும் சமூகத்தை தாம் வரவேற்பதாகவும், தற்போதைய காலத்தில் எதனை எடுத்தாலும் ஏதாவது ஒரு இலாபத்தோடு செய்கிறவர்கள் அதிகமாக உள்ளபோது இவ்வாறு அனைவருக்குமோர் முன்னுதாரணமாக திகழ்பவர்களை எமது மாகாணம் வரவேற்பதாகவும், ஒரு விடயத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு அப்பால் தங்களது அனுபவங்களையும் திறமைகளையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எமது சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கோடான ஓர் சமூகம் உருவாகுவதையே தாம் வரவேற்பதாகவும், அவ்வாறு அனைவரும் சிந்தித்து செயற்படுவோமானால் நிச்சயமாக நமது மாகாணமும் அனைத்து மாவட்டங்களும் ஓர் சிறப்பான இடத்தை எதிர்காலத்தில் எட்டும் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்தார். 
