பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் மிக இலகுவாக ஒன்றிணைந்து தமது நோக்கங்களை நிறைவேற்றி வருகின்றனர். இது இலங்கைக்கு மட்டுமன்றி அனைத்து நாடுகளுக்கும் பாரிய சவாலாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதனை முறியடிக்க உறுதியான விசாரணைக் கட்டமைப்பும், விரிவான தகவல் பரிமாற்ற கட்டமைப்பும் அவசியம். அதற்கு இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸார் இலங்கையுடன் கைகோர்த்து உதவுவர் என நம்புகின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சர்வதேச பொலிஸாரும் இலங்கை பொலிஸாரும் இணைந்து ஏற்பாடு செய்த தென் மற்றும் தென்கிழக்காசிய வலயத்தின் பயங்கரவாதம் மற்றும் சர்வதேச குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஒன்றுகூடல் நேற்று கொழும்பில் நடைபெற்றது. அந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இரு நாட்களுக்கு இடம்பெறும் இந்த ஒன்றுகூடல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடை பெற்று வருகின்றது. கனடா அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் நடைபெறும் இந்த ஒன்றுகூடலில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேஷியா, மலேஷியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குற்ற விசாரணை, பயங்கரவாத புலனாய்வு, சர்வதேச குற்றங்கள், உளவுத் தகவல்கள், சட்டத்தை அமுல் செய்தல் மற்றும் பொலிஸ் பயிற்சி ஆகியவற்றில் தேர்ச்சி மிக்க சுமார் 45 சிறப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, கனடா உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி ஜெனிபர் ஹார்ட், சர்வதேச பொலிஸாரின் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பிலான பணிப்பாளர் ஹரீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,
சர்வதேச பொலிஸார் இத்தகைய பிராந்திய வேலைத் திட்டம் ஒன்றினை இங்கு நடத்துவதற்கு தீர்மானித்தமை தொடர்பில் நான் முதலில் நன்றி கூறுகின்றேன்.
இன்று இலங்கை மட்டுமல்ல, முழு உலகும் எதிர்கொள்ளும் மிகப் பிரதான சவாலும் பிரச்சினையும் தான் இந்த பயங்கரவாதம் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பிலான விடயங்களாகும்.
உலக மயமாக்கலின் பின்னர் சட்டம் ஒழுங்கை அமுல் செய்வதில் பாரிய சவால்கள் ஏற்பட்டதன் விளைவே இதுவாகும்.
எனவே, சட்டம் ஒழுங்கை அமுல் செய்யும் பொலிஸார் உள்ளிட்டோரின் திறன் அபிவிருத்தி மற்றும் பயிற்சியை காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்க வேண்டும்.
தொழில் நுட்பமும் தொடர்பாடலும் மிக வேகமாக அபிவிருத்தி அடைந்துள்ள இக்கால கட்டத்தில் பாரிய குற்றங்கள் அவற்றின் ஊடாக மிக சுலபமாக இடம்பெறுகின்றன. முக்கியமாக போதைப் பொருள் கடத்தல் குற்றங்கள் மிகப் பெரிய சவாலாக உள்ளன.
அதேபோன்று பயங்கரவாத பிரச்சினையும் உள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சினை இருந்தது. 30 வருடங்களாக தனியான நாட்டைக் கோரி அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும் இன்றைய நிலைமை அவர்கள் போராடியது போன்று வெளிப்படையானதல்ல. மாற்றமாக இன்று சில பயங்கரவாத அமைப்புக்கள் தாம் ஒரு குழுவினர் இருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. இது ஒரு மிகப் பெரும் பிரச்சினை. அவர்களுக்கு நோக்கம் கிடையாது. தம்மை வெளிக்காட்டிக் கொள்ள அவர்கள் இத்தகைய பயங்கரவாத செயற்பாடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மிகப் பெரிய பிரச்சினையாகவுள்ளன. அதனூடாக பயங்கரவாதிகள் மிக சுலபமாக ஒன்றிணைகின்றார்கள். எனவே பொலிஸ் என்பது தேசிய ரீதியில் மட்டுப்படுத்தப்படாமல் அவர்களது பணி உலகமயமாக்கப்படல் வேண்டும்.
குறிப்பாக போதைப் பொருள் கடத்தல், சர்வதேச குற்றங்கள், பயங்கரவாதம் தொடர்பில் உறுதியான விசாரணைக் கட்டமைப்பு ஒன்று அவசியமாகும். அதற்காக கடந்த தகவல் பரிமாற்ற முறைமையும் வேண்டும்.
எனவே தான் சர்வதேச பொலிஸார் இது தொடர்பில் தலையீடு செய்து இலங்கை போன்ற நாடுகளுக்கு அது தொடர்பில் பயிற்சியளிக்க வேண்டும். தெற்கு தென் கிழக்காசிய நாடுகள் பலவற்றின் பிரச்சினை சட்டத்தை அமுல் செய்யும் பொலிஸாருக்கு உள்ள திறன் அபிவிருத்தி தொடர்பிலான வளப் பற்றாக்குறையேயாகும். எனவே இலங்கைக்கு மிக விரைவில் பொலிஸ் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பிலான பல்கலைக்கழகம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். இதற்காக சர்வதேச பொலிஸார் உதவி செய்வர் என் நம்புகின்றேன் என்றார்