பேஷ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிமுகமாகிய காதல் மரணத்தில் முடிந்த சம்பவம் ஒன்று சிலாபம் மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதியை காதலித்த இளைஞன், அந்த யுவதி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிந்து கொண்ட பின்னர், கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் மாரவில மஹாவெவ பகுதியில் மரமுந்திரி மரத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாரவில பொலிஸாரினால், இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொட்டுகச்சி சசதயாய பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 21 வயதான புஷ்பகுமார அழகக்கோன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் காற்சட்டை பையில் இருந்த புத்தகம் ஒன்றில் காணப்பட்ட தொலைபேசி இலக்கம் ஊடாக மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொலைபேசி இலக்கத்துடன் பொலிஸார் தொடர்பு கொண்டதை அடுத்து, மாரவில பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணொருவரும், யுவதி ஒருவரும் சம்பவத்திற்கு வந்து சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்த யுவதி மஹாவெவ நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வருகிறார்.
உயிரிழந்த இளைஞன் பேஷ்புக் மூலம் அறிமுகமாகியதாகவும் அவருடன் தொலைபேசியில் தொடர்புகளை வைத்திருந்தாகவும் யுவதி கூறியுள்ளார்.
திருமணம் செய்யுமாறு இளைஞன் தன்னிடம் யோசனை முன்வைத்தாகவும் அதனை தான் மறுத்த பின்னர், மீண்டும் சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு யோசனை முன்வைத்தாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதை மட்டும் தன்னிடம் கூறியதாகவும் அந்த இளைஞன் தனது மகளை திருமணம் செய்வதை தான் விரும்பவில்லை எனவும் யுவதியின் தாய் கூறியுள்ளார்.
அதேவேளை, உயிரிழந்த இளைஞன் தன்னை தொடர்ந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டதால், தான் தொலைபேசி இலக்கத்தை மாற்றியதாகவும் விரைவில் தான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தான் இளைஞனிடம் கூறியதாகவும் யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தம்மால் பொறுப்பேற்க முடியாது என்றும் அவரது குடும்ப விபரங்கள் தனக்கு தெரியாது எனவும் யுவதியும் அவரது தாயும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
உயிரிழந்த இளைஞன் நீல நிற காற்சட்டையும் வெள்ளை நிற கை நீள ரி சேர்ட்டையும் அணிந்து காணப்படுவதாகவும் அவரது பயண பொதியில் இருந்து கத்தி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.