தன்னை வெளிப்படையாக லட்சக்கணக்கானவர்கள் முன் சுய விளம்பரம் செய்துக் கொள்ளும் இடமாக சமூக வலைத்தளங்கள் மாறி நிற்கின்றன.
பிரபலமாக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கொஞ்சம் அதிகம் சிரித்தாலே பெயர் கெட்டுவிடும் என்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால், இன்று கவர்ச்சியாக எடுத்த படங்களைக் கூட எளிதாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விருப்புகளை அள்ளத் தான் பார்க்கிறார்கள்.
ஒருவர் தனது பதிவுகளுக்கு, படங்களுக்கு அதிகமாக / தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸ் கொடுத்து வந்தால் எளிதாக அந்த நபருடன் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். அல்லது அந்த நபரை தனது நட்பு வட்டாரத்தில் யார், எவர் என அறியாமல் சேர்த்துக் கொள்கின்றனர்.
நேரில் அல்லது அருகே அதிக தோழமை அல்லது உறவில் பெரிய பிடிப்பு இல்லாத பெண்கள், பேஸ்புக் மூலம் பழகும் நட்பு வட்டாரத்தை பெரிதாக்கிக் கொள்ள விரும்புகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான நட்புகள் சேர்த்துக் கொள்ள முகம் தெரியாத நபர்களை இணைத்துக் தனது விபரங்களை பகிரத் தொடக்கி விடுகின்றார்கள்.
இப்போது அதிக இளைஞர்கள் மத்தியில் காணப்படும் மோகம் இது. லைக்ஸ் மற்றவர்களுக்கு கிடைப்பது போல கிடைக்காமல் போனாலோ, வரும் லைக்ஸ் எண்ணிக்கை குறைந்தாலும் உடனே வருந்தத் தொடக்கி விடுவது. இதனால், எப்படியாவது அதிக லைக்ஸ் பெற வேண்டும் என இவர்கள் பல முயற்சிகளில் இறங்குகின்றார்கள்.
அன்று கடிதம், தொலைபேசி, நேரில் சென்று தான் காதலை சொல்ல வேண்டும். அப்படியே கூறினாலும், ஊர் சேர்ந்து அடிக்குமோ, அந்த பெண்ணே செருப்பை கழற்றும் சூழல் எழுமோ என்ற அச்சங்கள் இருந்தன. ஆனால், இப்போது இந்த அச்சம் இல்லாததால் சமூக தளங்கள் மூலம் காதலை பகிர்வது அதிகரித்துவிட்டன.
சின்னச் சின்ன பிரச்சனைகள் எழுந்தாலும் கூட, உடனே காதல் முறிந்து, அடுத்த நபருடன் இணையவும் சமூக தளம் ஒரு காரணியாக இருக்கிறது. இப்போதெல்லாம் காதல் தோல்வியை புகைப்படத்துடன் ஃபீலிங் அலோன் என பதிவு செய்வது அதிகரித்து விட்டது. இதை கண்டதும், தோள் கொடுத்து ஆசை வார்த்தை பேசி, காதலில் அப்பெண்ணை வீழ்த்த துடிக்கும் அன்(ம்)புகள் இங்கே ஏராளம்.
மேலும், இளம் வயதான 17 – 24-க்குட்பட்ட வயதினர் அதிகமாக பேஸ்புக் மாயைகளில் ஏமார்ந்துவிடுகின்றனர். புதிய நபர்களுடன் பழகுவதில் இருக்கும் ஈர்ப்பு, வெளி செல்ல வேண்டும் என்ற துடிப்பு போன்றவை இவர்களை ஏமாற செய்கிறது. பேஸ்புக் மூலம் இணைந்த பல காதலர்களும் இருக்கிறார்கள், ஃபேஸ்புக் மூலம் பிரிந்த காதலர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு நபர் எப்படி பேஸ்புக் என்ற கருவியை பயன்படுத்துகிறார் என்பதில் தான் இருக்கின்றது.
ஒரு பெண் செல்ஃபி புகைப்படத்தை செய்துவிட்டார் அதற்கு குவியும் லைக்ஸ்-க்கு ஈடு நிகர் வேறு என்ன என்பது ஆய்வு தான் செய்ய வேண்டும். அழகு என்பதை தாண்டி, முக பாவனைகளை பல்வேறு விதமாக காண்பித்து பதிவு செய்து, தங்கள் படங்களை எண்ணிலடங்காத வண்ணம் பகிரும் போது, அது சில சமயங்களில் தவறான வழிகளில் பலர் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.
விபரீதம் 1 : அதிகமான பெண்களின் படங்களை, குரூப்களில் லைக்ஸ்-காக பலர் பகிர்கின்றார்கள்.
விபரீதம் 2 : வேறு பெண்களின் படத்தைப் பயன்படுத்தி போலி கணக்குகள் ஆரம்பித்து, அதன் மூலம் வேறு ஆண்களுடன் தகாத முறையில் பழகுதல்.
விபரீதம் 3 : மாபிங் செய்து, நிர்வாண உடலுடன் இணைத்து அவமானப்படுத்துவது.
விபரீதம் : 4 : ஆபாசத் தளங்கள் அல்லது டேட்டிங் தளங்கள், மொபைல் அப்க்ளில் வேறு பெண்களின் படங்களை பயன்படுத்தி ஏமாற்றுவது.