கட்டுரைகள்பிரதான செய்திகள்

பேரம்பேசலை பறித்தெடுக்கும் தேரவாத வியூகம்

சுஐப் எம் காசிம்

முஸ்லிம் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பை உணர்த்தி பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், எதைச் சாதித்தனர் ,இந்தப்பதவி விலகல் உணர்த்திய செய்திகள் என்ன? இந்தக் கேள்விகளின் எதிரொலிகளே முஸ்லிம் அரசியல் களத்தின் எதிர்கால நகர்வுகளைக் கட்டியங் கூறப் போகின்றன முஸ்லிம் பெயர்தாங்கிய ஒரு சில இளைஞர்களின் பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்க முயன்ற, தேரவாதிகளின் பிரயத்தனங்களை, இப்பதவி விலகல்களால் முறியடிக்க முடிந்ததை மட்டும் எல்லோரும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

முஸ்லிம் எம்பிக்களை மீண்டும் அமைச்சரவைக்குள் உள்வாங்கும் அரச உயர் மட்டத்தின் முயற்சிகள் இதனையே உணர்த்துகின்றன. எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் பிரதேசங்களில் காலூன்றுவதற்கு அரச தரப்பு எடுக்கும் இரகசிய இராஜதந்திரங்களும் இந்த முயற்சிக்குள் உள்ளன. கண்டி, போகம்பரை மைதானங்களில் வானுயர எழுந்த முஸ்லிம் விரோதக்குரல்களுக்கு பிரதமர் உட்பட அரசாங்கத்தின் முக்கிய தரப்புக்கள் பதிலளிக்காததை சந்தேகத்துடன் நோக்கிய முஸ்லிம்கள் நிதான போக்குள்ள தேசிய கட்சிகளின் தலைமைகளே ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டுமெனவும் விரும்புகின்றனர். தேர வாதத்துக்கு துணைபோகும் தலைமைகளில் அவர்கள் நாட்டம் காட்டவில்லை என்பதும் தெளிவுபடுகிறது

இன்னும் சில காலத்துக்கு தங்கள் தலைமைகள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காது கூட்டுப் பொறுப்பைப் பேணினால் இனவாதத்துக்கு தலைசாய்க்கும் தேசிய கட்சிகளின் பாரம்பரியங்களை இல்லாமல் செய்துவிடலாம்.எனவே அமைச்சுப் பொறுப்புக்கள் தற்போதைக்கு தேவையில்லை எனவும் முஸ்லிம் அரசியல் தளத்தில் பேசப்படுகிறது.இன, மத, சமூகங்களின் அபிலாஷைகளுக்கு குறுக்காக நிற்கும் எந்தக் கோரிக்கைகளையும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக் கொண்டதில்லை.ரணிலின் தலைமைக்கு முன்னர், நடந்த சில சம்பவங்களாலே, ஐ.தே.கவும் பௌத்த தேசியவாதத் தலைமையாகப் பார்க்கப்பட்டது.

இந்தப்பார்வைகளை படிப்படியாக தாராளவாதப் பக்கம் திசைதிருப்பியது ரணிலின் தலைமையே! இதனாலே தெற்கில் ஆழக்காலூன்ற ஐ.தே.வுக்கு முடியாதுள்ளது. இதனால்தான் ராஜபக்ஷக்களுக்கு நிகராக, சிங்கள பௌத்த வாக்குகளைப் பெறும் நோக்குள்ள சிலர், ரணிலின் தலைமையை மாற்றக் கோருகின்றனர். இச்சிந்தனைகளின் ஏணிப்படிகளிலிருந்தே சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் அடுத்த அரசாங்கத்தை தெரிவதற்கான நகர்வுகளில் இறங்க வேண்டும். கட்சிகளல்ல இங்கு பிரதானம். கட்சிகளின் தலைமைகளைப் புடம்போடுவதில் தருணம் தப்பாத சிந்தனையே எமது தலைமைகளுக்கு அவசியம். உண்மையில் ஜனநாயகவாதத் தாராள சிந்தனையால் ஆட்சிகளைப் பிடிக்கும் பல சந்தர்ப்பங்களை ரணில் தவறியிருந்தாலும் தனது அரசியல் முதலீடுகளில் கடும்போக்குவாதம், இனவாதம், தேரவாதத்தை அவர் வைப்பிலிட்டதில்லை.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் கிளம்பியுள்ள ஓரவஞ்சனைச் சமாந்தரங்கள், சித்தாந்தங்களை முறியடிக்கப் பொருத்தமான ஆளுமையை ஓரளவுக்காவது முஸ்லிம்களும் முஸ்லிம் தலைமைகளும் அடையாளம் கண்டுள்ளன. அரசுக்கு எதிரான சகல பிரேரணைகளும் தோற்கடிக்கப்பட்டதும் இந்தப்புரி தல்களில்தான்.இதனால்தான் சிறுபான்மையினரின் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைப்பதைத் தடுக்கும் தூரநோக்குச் சிந்தனைகள் படிப்படியாக பல விஸ்வரூபங்களில் வௌிப்படுகின்றன. இக் காலத்தில் முஸ்லிம் எம்பிக்கள் மிக விழிப்புடன் செயற்படுவது பாராட்டுக்குரியது. முஸ்லிம் எம்பிக்களை அமைச்சுப்பதவிகளை எடுக்கவிடாமல் தடுப்பதனூடாக, அடிப்படைவாதத்தின் சாயல்கள் இன்னும் வீழவில்லையென்ற விம்பத்தைக் காட்டுவதும், முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய தேசிய கட்சித் தலைமைகள் இலகுவாக நுழைவதைத் தடுக்கவுமே, இந்தக் கோஷங்கள் தலையெடுக்கின்றன.

இல்லாவிட்டால் எதற்கு இப்போதும் றிஷாத் பதியுதீன் மீது விரல்கள் நீட்டப்பட வேண்டும்? ஈஸ்டர் தினத்தாக்குதலுக்குப் பின்னர் றிஷாத்தின் மீது முந்நூறு குற்றச்சாட்டுக்களை சுமத்திய கடும்போக்கர்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தாக்குதல் நடந்து மூன்று மாதங்களாகிவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தாலும் தொண்ணூறு குற்றங்களுக்கே சாத்தியம். மூன்று மாதத்தில் முந்நூறு குற்றமென்றால் ஒரு மாதத்துக்கு நூறு குற்றங்கள்.”சைபர்” குற்றங்களைச் செய்வதற்கும் (இணைய குற்றம்) இக்கால இடைவௌிகள் சந்தர்ப்பமளிக்காது. இவர்களின் கோரிக்கைகள், குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சி, அமைச்சுப் பதவிகளைப் புறந்தள்ளுவது முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசலை கடும்போக்கர்களுக்கு கையளித்ததாகிவிடும். இதுவே மீண்டும் அமைச்சுக்களைப் பொறுப்பேற்கத் தூண்டுகின்றது.

இன்றுள்ள நிலைமைகளில் பிரதேச அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தி வாக்காளர்களைத் தக்கவைக்க முடியுமா? என்றும் சிலர் சிந்திக்கலாம். “கடும்போக்கர்களுக்கு அரசாங்கம் அஞ்சவில்லை, முஸ்லிம்கள் இணங்கவில்லை” என்பதை வௌிப்படுத்துவதற்கே அமைச்சுக்களைப் பொறுப்பேற்க வேண்டி உள்ளது.இல்லாவிட்டால் தேரவாதமும், கடும்போக்கும் சிறுபான்மையினரின் பேரம்பேசலைக் கையிலெடுத்த கதையாகி ,நிலைமைகள் குரங்கு ஆப்பிழுத்த கதையாக நேரிடலாம்.

கல்முனை உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் சமூகங்கள் முரண்படும் விடயங்களுக்கான,தீர்வை தேரவாதத்துக்குத் துணைபோகும் தலைமைகளிடம் எதிர்பார்த்து சிறுபான்மைத் தலைமைகள்,ஏட்டிக்குப் போட்டியான காய்களை நகர்த்துவது,எமது அபிலாஷைகளை எடுப்பார் கைப்பிள்ளையாக்கி விடும்.சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு தேரவாதத்தில் தீர்வுகிட்டாதென்ற தெளிவுகளூடாகவே,உள்ளக நிர்வாக முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது

தற்போது பரவலாகப் பேசப்படும் முஸ்லிம் விவாகச் சட்டம் மெதுமையான கோணத்தில் ஆராயப்படுவதற்கு இடமளித்ததும் ரணிலின் தாராண்மைவாதம்தான். இஸ்ரேலை வரவழைத்த ஜேஆர் ஜெயவர்தன, வடக்கு கிழக்கு மாகாணங்களை இரண்டு வருடங்கள், தாரைவார்த்த பிரேமதாச ஆகியோரின் நேர்கோணலான சிந்தனைக்கு இடமளித்திருந்தால் ரணிலாலும் தெற்கில் நிலைப்பட்டிருக்க முடியும்.

2002 முதல் 2004 வரை, ரணிலும் இதே தவறைச் செய்ததாக சிலர் வாதிட்டாலும் வௌிநாடுகளின் கண்காணிப்புக்குள் அந்த அரசு இருந்ததால் எழுமாந்தமாக அவர்களால் செயற்பட முடியவில்லை. முடிந்தாலும் அவர்களால் நிலைக்க இயலவில்லை. இந்தக்காலப்பகுதியில் இவர்கள் நடந்து கொண்ட முறைகள், வடக்கு கிழக்கில் தனி ராச்சியம் கோரிய ஆயுததாரிகளின் மன நிலைகளைப் புரிந்து கொள்ள உதவியது. இதன்பின்னர்தான் ரணிலின் ராஜதந்திரங்களைச் சிலர் கண்டுகொண்டனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை முஸ்லிம்கள் அந்த பஸ் வண்டியில் பயணிக்கக் கூடாதென மு. கா, தலைவர் அஷ்ரஃப் ஏன் சொல்லியிருப்பார் என்பதையே இப்போது ஆராய வேண்டியுள்ளது. இருபது வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் ஒன்றித்திருந்த தெற்கு முஸ்லிம்களைத் தனித்துவக் கட்சியில் ஈர்ப்பதற்கு வேறு வழியின்றியே இந்தத் தாரக மந்திரத்தை அஷ்ரஃப் பாவித்திருப்பார்.கிழக்கு முஸ்லிம்களை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தாலும் தெற்குத் தளம் அஷ்ரஃபுக்கு ஒரு சவாலாக இருந்ததாலே இந்தத் தாரக மந்திரம் பாவிக்கப்பட்டதோ தெரியாது. அரசியல் சிந்தனைகள் காலவோட்டத்துக்கு ஏற்ப மாறவேண்டுமே தவிர, வேத வாக்குகளல்ல.

Related posts

கருணாவின் பிறந்த நாள்! பால்சோறு வினியோகம்

wpengine

ஒரு தொகுதி பொருட்களை வழங்கி வைத்த சித்தார்த்தன் பா.உ

wpengine

மன்னார், மாந்தையில் பௌத்த விகாரை! சட்டவிரோத மீறல் சிவகரன்

wpengine