நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இன்று 16.05.2016 மன்னார் பேசாலை பகுதியில் மினி சூறாவளி ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு அரச அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்திருந்தார்கள்.
அவ்விடத்துக்கு விரைந்த வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் சேத விபரங்களை பார்வையிட்டதோடு மக்களுடன் கலந்துரையாடி சேத விபரங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்டார். அப்பொழுது மக்கள் தங்கள் வாழ்நாளில் இவ்வாறனதொரு அனர்த்தம் தங்கள் ஊருக்கு இடம்பெறவில்லை என்றும் முன்னொருபோதும் இடம்பெற்றதாக தாங்கள் அறியவில்லை என்றும் பலமில்லியன் ரூபா சொத்துக்கள் சேதமாகி உள்ளதையும் குறிப்பிட்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வறிய குடும்பங்களாக உள்ளபடியால் மன்னார் மாவட்ட மீன்பிடி திணைகளத்தின் அதிகாரிகள் விரைந்து நிவாரணங்கள் பெற்றுகோடுபதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேலும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மீனவர்களுக்குரிய போலீஸ் முறைப்பாடு, சரியான சேத மதிப்பீடு, உரிய தரவுகளை பெற்றுக்கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் இதன்மூலம் நிவாரணங்கள் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்கலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி M.A.C.M.ரியாஸ் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் இது ஒரு வரலாறு காணாத அனர்த்தம் எனவும் இதன்மூலம் பல மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இழப்பீடுகளை விரைந்து பெற்று கொடுக்க வேண்டும் என்றும் பணித்தார்.