எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
நீர்கொழும்பு – பலகத்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், இன வன்முறையாக மாறியுள்ளது.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் உடமைகளை சேதப்படுத்தி பெரும் அட்டகாசம் செய்துள்ளனர்.
அந்தப் பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சில குழுக்கள் அந்தப் பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறான மோசமான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
எந்தவொரு நபரையும் யாரும் துன்புறுத்தவோ, காயப்படுத்தவோ கூடாது. கிறிஸ்தவ மக்களிடம் விசேட கோரிக்கையாக கேட்கிறேன்.
முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள். அவர்களை எந்த வகையில் காயப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் பேராயர் வினயமாக கேட்டுள்ளார்.
பலகத்துறைப் பகுதியில் தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த கும்பல், முஸ்லிம் மக்களின் வீடுகளுக்கு புகுந்து அட்டகாசம் செய்துள்ளமையினால் அந்தப் பகுதியில் அச்ச நிலைமை தொடர்கிறது.
எனினும் முப்படையினரும் அந்தப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.