கட்டுரைகள்பிரதான செய்திகள்

பட்டியல் உறுப்பினர்களுக்காக பிச்சைப் பாத்திரம் ஏந்தவேண்டிய நிலையே

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி)

சிரியாவில், பலஸ்தீனத்தில் தம்மை தாக்குவதற்கு வருகின்ற கவச வாகனங்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வயதான பெண்களின் தைரியமும் துணிச்சலும் கூட, இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு இல்லை என்பதைத்தான் நெடுங்காலமாக கண்டும் உணர்ந்தும் வருகின்றோம்.

முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவாக்க, யாப்பு ரீதியான அநியாயங்கள், கொள்கை வகுத்தல்கள், மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ‘நக்குண்டார் நாவிழந்தார்’ என்பது போல எல்லாவற்றுக்கும் ஆதரவளிக்கின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ‘பொறுமைகாத்தல்’ என்ற பெயரில் வாய்மூடி மௌனமாக இருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள், எது நடந்தாலும் நடக்கட்டும் ‘நமக்கு நாலு காசு ஆனால் சரிதானே’ என்று இருக்கின்ற அரசியல்வாதிகள் என பல ரகமானவர்கள் நமது அரசியலில் உள்ளனர்.

பதவி இருக்கின்ற அரசியல் தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும், அரசாங்கத்தை எதிர்த்துப் பேசினால் பதவிகளும் வரப்பிரசாதங்களும் இல்லாது போய்விடும் என்ற பயம் பிடுங்கித் தின்கின்றது. பதவியில்லாத அரசியல்வாதிகள், ‘பதவியிருந்தால் சாதித்திருப்போம். இப்போது அதிகாரமில்லாமல் எதனையும் செய்யமுடியாது’ என்று வாழாவிருக்கின்றனர். இதுதான் நிதர்சனம்.

கண்டி வன்முறைகள் போல சில சந்தர்ப்பங்களில் அத்திபூத்தாற்போல் குரல்கொடுக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளின் உரைகளும், இன வன்முறையை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றமையும் சற்று ஆறுதல் தருகின்றன என்றாலும், அவ்வாறு பேசிய ஒரு பிரதியமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா என கட்சி யோசிப்பதாகவும் அவர் பிரதமரை விமர்சித்ததற்காக கட்சிக்குள் கோபப் பார்வையால் நோக்கப்படுவதாகவும் வெளியாகின்ற தகவல்கள், நமது முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஐ.தே.க.விலும் சு.க.விலும் எந்தளவுக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு மிகப் பிந்திய உதாரணமாக துருத்திக் கொண்டு நிற்கின்றது,
பல்லின நாடொன்றில் மத, இன அடையாளங்களை எவ்வாறு சரியாக வெளிப்படுத்துவது? எவ்வாறு முஸ்லிம்கள் முஸ்லிம்களாக வாழ்வது என்பதை சிந்திக்காமலும் தமது நடவடிக்கைகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்தாமலும் முஸ்லிம்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு காலசூழலில், சியோனிசமும் இரு வகையான இனவாதங்களும் அதனுடன் இணைந்து ஒட்டுக் குழுக்கள் தொடக்கம் வர்த்தக போட்டியாளர்கள் வரை எல்லோரும் முஸ்லிம்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும் இனக்கலவரங்களை முடுக்கிவிடுவதும் இலகுவாக நடந்து கொண்டிருக்கின்றது என்பதும் ரகசியமல்லவே.கண்ணைமூடி ஆதரவு
இப்பேர்ப்பட்ட ஒரு காலப்பகுதியிலேயே மாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணய அறிக்கையும் அதன்பின்னர் அது தொடர்பான சட்டமூலமும் பாராளுமன்றத்திற்கு வரவுள்ளது.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 3ஏ(11)பிரிவினை திருத்திய 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க திருத்தச் சட்டத்திற்கு அமைவாக எல்லை மீள்நிர்ணய குழு தமது அறிக்கையை அண்மையில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்திருந்தது. இந்த அறிக்கையை கடந்த வியாழக் கிழமை பாராளுமன்றத்தில் 14ஆவது நடவடிக்கையாக சமர்ப்பிப்பதற்கு ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அன்று சமர்ப்பிக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் ஓரிரு தினங்களில் இந்த அறிக்கை சபைக்கு வரவுள்ளது.

சட்டவாக்கங்கள், தேர்தல் முறை மாற்றங்கள், சட்டத் திருத்தங்கள், யாப்பு மாற்ற முன்னெடுப்புகளால் எத்தனையோ தடவை இலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். உள்ளுராட்சி சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்னதாக வட்டார மற்றும் உள்ளுராட்சி எல்லை மீள்நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. அது விடயத்தில் முஸ்லிம்களிற்கு நியாயம் நிலைநாட்டப் படவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப பல பிரதேசங்களில் உறுப்பினர்கள் ஒதுக்கப்படவில்லை. வட்டாரங்கள் பிரிப்பு முறையாக இடம்பெறவில்லை. இதுவெல்லாம் முஸ்லிம்களுக்கு பாதகமானது என்று அறிக்கைவிட்டுக் கொண்டே முஸ்லிம் எம்.பி.க்கள் ஆதரவளித்தனர். இரட்டை வட்டாரத்தில் இரு உறுப்பினர்களும் வெற்றிபெறும் கட்சிக்கே கிடைக்கும் சட்ட ஏற்பாடு முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவின்றியே நிறைவேற்றப்பட்டது. 21 எம்.பி.க்கள் இருந்தும் எதையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இதற்கு முன்னதாக மஹிந்தவை இன்னுமொரு தடவை ஜனாதிபதியாக்கும் 18ஆவது திருத்தத்திற்கு அதாவுல்லா, ஹக்கீம் றிசாட் உட்பட அநேகர் ஆதரவாக வாக்களித்தனர். திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவளித்தனர்.

20ஆவது திருத்தம் என்னவென்று தெரியாமலேயே கிழக்கு மாகாண சபை அதற்கு ஒப்புதல் அளித்தது, பதவியிலிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் புதிய தேர்தல் முறைமைக்கு ஆதரவாக கையுயர்த்தினர்.

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் ஆட்சியில் அங்கம் வகிக்கின்ற எல்லா முஸ்லிம் எம்.பிக்களும் திருத்தங்களுக்கு சார்பாக கையுயர்த்தி விட்டு நொண்டிச் சாட்டுக்களை சொல்லி இருக்கின்றார்களே தவிர என்ன நடந்தாலும் பரவாயில்லை சமூகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்று துணிச்சலுடன் எழுந்து நின்றவர்கள் என்று தற்கால அரசியல் மேய்ப்பர்கள் யாரையும் குறிப்பிட முடியாது.

இந்த இலட்சணத்தில், பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ள மாகாண எல்லை நிர்ணயத்திற்கும், நமது அரசியல் தலைமைகளும் ஏனைய எம்.பி.க்களும் முட்டாள்தனமாக பழக்க தோசத்தில் கையுயர்த்தி விடுவார்களோ என்ற நியாயமான சந்தேகம் முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு பாதிப்பு
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்காக எவ்வாறு வட்டார மற்றும் உள்ளுராட்சி சபை எல்லைகள் மீள் வரையறை செய்யப்பட்டது போலவே, மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக மாகாணங்களுக்குள் உள்ளடங்குகின்ற தேர்தல் மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளின் எல்லைகளை மீள் வரையறை செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளித்துள்ளது. இருப்பினும் இன்னும் இது சட்டவலுப் பெறுவதற்கு, பல கட்டங்களை கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது.

மாகாணங்களின் எல்லை மீள்நிர்ணய குழுவில் முஸ்லிம்கள் சார்பாக நியமிக்கப்பட்டவர் ஆய்வாளரும் புவியியல் பேராசிரியருமான எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் ஆவார். முஸ்லிம் சமூகம் பற்றி இயல்பாகவே அக்கறை கொண்டவரான இவர் ஏதாவது அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சில பரிந்துரைகள் தட்டிக் கழிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இதனால் அவர் பல தடவை இக் குழுவில் இருந்து விலகிக் கொள்ள முயன்றார். அது சாத்தியப்படவில்லை. கடைசி அறிக்கையில் தமது பரிந்துரைகள் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை என்றதும் தனியான ஒரு அறிக்கைகையும் ஹஸ்புல்லாஹ் சமர்ப்பித்திருக்கின்றார்.

எல்லை நிர்ணய குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் இன்னும் திருத்தப்பட இடமுண்டு. ஆனால் ஒருவேளை இந்த அறிக்கையே சட்ட வலுப்பெறுமாக இருந்தால், அதனால் 50இற்கு 50 என்ற புதிய மாகாண சபை தேர்தல் முறைமையின் கீழ் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் கடுமையாக குறைவடையும் என்பதுதான் இப்போதிருக்கின்ற பிரச்சினையாகும். எனவே இது குறித்து முஸ்லிம்கள் விரைந்து செயற்பட்டு தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிது அவசியமாகும். அடுத்த – அதற்கடுத்த தலைமுறையினருக்காகவும் இன்றைய தலைமுறை மீது இருக்கின்ற பாரிய கடப்பாடும் ஆகும்.
பதின்மூன்று தொகுதிகளே
எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட 13 தொகுதிகளே பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 3 தொகுதிகளும் மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, புத்தளம் மாவட்டங்களில் முஸ்லிம்களை கணிசமாகக் கொண்ட தலா இரு தொகுதிகளும், கண்டி, களுத்துறை மாவட்டங்களில் ஒரு தொகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் பரவலாக வாழ்கின்ற போதும் ஏனைய மாவட்டங்களில் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை தொகுதியாவது உருவாக்கப்படவில்லை.
இரட்டை அங்கத்தவர் தொகுதிகள் தொடர்பில் சட்டத்தில் தெளிவின்மை காணப்படுவதாக கூறப்படுகின்ற நிலையில் இரட்டை அங்கத்தவர் தொகுதியை உருவாக்கி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் இன்னும் அதிகமான முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகளை உருவாக்குவதற்கும் பேராசிரியர் ஹஸ்புல்லா முன்வைத்த சிபாரிசுகள் வெற்றியளிக்கவில்லை.
இதனால் 13 மாகாண சபை உறுப்பினர்களையே நிச்சயமாக முஸ்லிம்களால் பெறக் கூடியதாக இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக வேறு அடிப்படைகளில் சில முஸ்லிம் உறுப்பினர்களை பெறும் வாய்ப்பு அரிதாக காணப்படுகின்றது.

என்றாலும் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது நிச்சயமில்லை. அதேபோல் பெரும்பான்மைக் கட்சிகளால் புண்ணியத்தில் வழங்கப்படும் பட்டியல் உறுப்பினர்களுக்காக பிச்சைப் பாத்திரம் ஏந்தவேண்டிய நிலையே ஏற்படும்.

இந்த சிபாரிசு அறிக்கையின் படி, 222 தொகுதிகள் உருவாக்கப்பட சாத்தியமுள்ளது. அதன் பிரகாரம் நாட்டில் 78.8 வீதமாக வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு 74.9 வீதமான உறுப்புரிமையும், 11.26 வீதமான தமிழர்களுக்கு 11.1 வீதமான உறுப்புரிமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதில் சந்தோசமே. ஆனால்; 9.7 வீதமாக வாழும் இரண்டாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு 5.85 வீதமான உறுப்புரிமையே பெற வழிசெய்யப்பட்டுள்ளமை அநீதியும் கவலை தரும் விடயமுமாகும்.
இந்த அறிக்கையின் சிபாரிசுகள் சட்டமாகும் என்றால், புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் பூர்வீகமான வட மாகாணம் உள்ளடங்கலாக 5 மாகாணங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கும். அதாவது 18 மாவட்டங்களின் கீழ் வரும் தேர்தல் தொகுதிகளில் முஸ்லிம் ஒருவரை மாகாண சபை உறுப்பினராக ஆக்குவது என்பது பெரும் பாடாக இருக்கும் என்று பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் போன்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்னும் சொல்லப் போனால், வடக்கு கிழக்கில் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியுமாக இருந்தாலும் அதற்கு வெளியில் சிதறி வாழ்கின்ற 70 வீதமான முஸ்லிம்கள் 6 இற்கு உட்பட்ட மாகாண சபை உறுப்பினர்களையே பெறும் வாய்ப்பிருக்கின்றது. இதன் பாதிப்பு அதற்கு அடுத்தபடியாக நடைபெறும் பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் வெளிப்படும் என்று அனுமானிக்க முடிகின்றது.

பொடுபோக்குத்தனம்
இதற்கு காரணங்கள் என்னவென்பது நமக்கு தெரிந்தவைதான். குறிப்பாக பல்-அங்கத்தவர் தொகுதி முறைமை பற்றிய தெளிவின்மையும் அது தொடர்பான சட்ட ஏற்பாடும், முஸ்லிம்களின் பரம்பல் பற்றிய அறிவின்மை மற்றும் விஷேட நிலைமைகளை கையாளவும் ஒவ்வொரு இனக் குழுமத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் அவசியமான விஷேட ஏற்பாடுகளை கொண்டிருக்காமை என எல்லை மீள் நிர்ணய குழு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. மறுபுறத்தில் இனமேலாதிக்க, மாற்றாந்தாய் மனப்பாங்கும் ஹஸ்புல்லாவின் சிபாரிசுகள் கணக்கெடுக்கப்படாமையும் ஏகத்திற்கு நடந்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும் முஸ்லிம் கட்சிகள் எந்த காத்திரமான நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ ஜனாதிபதியிடமோ அல்லது பிரதமரிடமோ பாரிய அழுத்தம் ஒன்றை கொடுக்கவில்லை. தேசிய காங்கிரஸ் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதாக தெரியவில்லை.

பெரும் எதிர்பார்ப்புக்களோடு உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்போ (முஸ்லிம் கூட்டமைப்பு) அதன் தலைவர் எம்.ரி. ஹசன்அலியோ அம்பாறை மற்றும் கண்டிக் கலவரங்கள் பற்றி ஒரு அறிக்கையை தானும் விடாத நிலையில் இது பற்றியாவது மக்களை தெளிவுபடுத்தவில்லை.
எனவே, எல்லாம் நடந்த பிறகு ஐயோ தவறு செய்துவிட்டோம் என்றும் அதை திருத்த வேண்டும் என்றும் அறிக்கை விடுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் காத்திருக்கின்றார்களா? அல்லது இரவில் படுக்கையை நனைக்கின்ற பராயமடையா பிள்ளைகள் காலையில் மழுப்பி மழுப்பி விளக்கமளிப்பது போல் விளக்கமளிக்க எண்ணியுள்ளார்களா என்ற கேள்வி எழுகின்றது.

முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது தலையாய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். 21 எம்.பி.க்களும் ஏகப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் இருந்தும் இத்தனை அநியாயங்கள், இன ஒடுக்குமுறைகள் முஸ்லிம்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற சூழலில் உறுப்புரிமை குறைந்தால் என்ன நடக்கும் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. தற்கால முஸ்லிம்கள் சரியான மக்கள் பிரதிநிதிகளை, தலைமைத்துவங்களை தெரிவுசெய்யவில்லை என்பது வேறுகதை. ஆனால் அடுத்த சந்ததியினருக்காவது அதனை செய்வதற்கு ஏதுவான சட்ட ஏற்பாடு இருக்க வேண்டும். அப்படியானால் முஸ்லிம்களும் அவர்களது அரசியல்வாதிகளும் என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்யலாம்?
மாகாண எல்லை மீள்நிர்ணய அறிக்கை இன்னும் இற்றைப்படுத்தப்படவில்லை. அது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு வாதத்திற்கு விடப்படவுள்ளது. அங்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். அத்துடன் இதனை நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு அறுதிப் பெரும்பான்மை அவசியமாகும். அறுதிப் பெரும்பான்மை இல்லாதவிடத்து வேறு அடிப்படையில் நிறைவேற்றப்படலாம் என்று அரசியல் அவதானிகள் சொன்னாலும்,இதில் திருத்தங்களை மேற்கொள்ள இன்னும் சந்தர்ப்பம் உள்ளதை மறந்துவிடக் கூடாது.

குறிப்பாக, புதிதாக பொலனறுவை, மாத்தளை, கேகாலை, கம்பஹா, காலி, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முஸ்லிம் கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களும் கடுமையாக குரல் கொடுக்க வேண்டும். மேற்படி மாவட்டங்களில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களை உள்ளடக்கியதாக தொகுதிகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். இயலாத பட்சத்தில் பல்-அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதற்கான வழிவகைகளை பாராளுமன்றத்தின் ஊடாக மேற்கொள்வது அவசியமாகும். அதேபோன்று ஆய்வாளர் வை.எல்.எஸ்.ஹமீட் போன்றோர் கூறுவது போல இரட்டை வாக்குச்சீட்டு முறைக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இப்போதிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் யாருமே இனக் கலவரங்கள் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலோ அல்லது முஸ்லிம்களின் இனத்துவ, மத அடையாளங்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்திலோ தமது பதவிகளை துறந்தது கிடையாது. ஒரு தேர்தல் காலத்தில் அன்றி வேறெந்த சமூகக் காரணத்திற்காகவும் கட்சி தாவல்களோ இராஜினாமாக்களோ மேற்கொள்ளப்பட்ட வரலாறும் கிடையாது. குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்கு பாதகமான சட்டமூலங்களை எதிர்ப்பது கூட மிக மிக அரிதாகவே நடக்கின்றது. ஆனால் இந்த எல்லை நிர்ணய விடயத்தில் அவ்வாறு செயற்படக் கூடாது
அரசாங்கம் நிலை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் கட்சிகளின் முட்டுக்கொடு;த்தல் மிக அவசியமாக அரசாங்கத்திற்கு தேவைப்படுகின்றது. எனவே இந்த தருணத்தை முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் சரியாக பயன்படுத்த வேண்டும். தேர்தலை நடத்த அரசாங்கம் விரும்புகின்றதா இல்லையா என்ற எந்த விடயத்தையும் கருத்திற் கொள்ளாமல், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதிலேயே விட்டுக் கொடுப்பில்லாமல் செயற்பட வேண்டியுள்ளது.

திருப்திப்படும் விதத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எல்லை நிர்ணயத்திற்கே எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் ஆதரவளிக்க வேண்டும். அவ்வாறில்லாத எந்தவொரு சட்ட ஏற்பாட்டுக்கும் எதிராக பாராளுமன்றத்தில் பேசவும் எதிர்த்து வாக்களிக்கவும் வேண்டும். வாக்களிப்பில் இருந்து விலகியிருப்பது எதிர்ப்பை வெளிக்காட்ட சரியான முறையல்ல.
அதைவிடுத்து, அமைச்சை பறித்துவிடுவார்கள், ஜனாதிபதி கோபித்து விடுவார், பிரதமர் முகம்சுழித்து விடுவார், வருமான வழிகள் முடக்கப்பட்டு விடும், வாகனங்களும் இன்னபிற சொகுசுகளும் குறைந்துவிடும் என்ற எந்தக் காரணத்திற்காகவும், மக்களுக்கு பொய்யான கற்பிதம் ஒன்றைச் சொல்லி விட்டு வழக்கம் போல எந்தக் ‘கறுப்பு ஆடுகளும’;, முஸ்லிம்களுக்கு பாதகமான எல்லை நிர்ணயத்திற்கு ஆதரவளிக்கக் கூடவே கூடாது.

ஓநாய்கள் பரவாயில்லை, இப்போதெல்லாம் கறுப்பு ஆடுகளிடம்தான் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

Related posts

மூன்றரை வருடத்தில் மாகாண சபை என்ன செய்தது

wpengine

விஜயதாச ராஜபக்ஷ என் மீது பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றார்.

wpengine

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்

wpengine