ஊடகப்பிரிவு-
பெருமானாரின் முன்மாதிரிகளைப் படிப்பினையாகக் கொண்டு, சோதனைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம்கள் தயாராக வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.
இறைதூதர் முஹம்மது நபியின் மீலாத் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மீலாத் வாழ்த்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“முஹம்மது நபியின் முன்மாதிரிகள் சகல சமூகங்களுக்கும் சத்திய வழியைக் காட்டுகிறது. அறியாமை இருள் சூழ்ந்திருந்த அன்றைய அரேபிய சமூகத்தில் தோன்றிய இறைதூதர் முஹம்மது நபியவர்கள், பெரும் வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தினார். எத்தனை இன்னல்கள் வந்தாலும் முஸ்லிம்கள் அவரை விட்டுக்கொடுக்கப் போவதுமில்லை.
அதி சிறந்த அறப் போதனைகளால் மானுட வர்க்கத்தையே நல்வழிப்படுத்திய அவரை, இன்று சில ஐரோப்பியர்கள் ஏளனம் செய்வது முஸ்லிம்களைக் கவலைப்படுத்துகிறது.
சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து மறைந்த ஒருவரை, அதிலும் உலக சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானோர் பின்பற்றும் இறைதூதரை, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அவமதிப்பது, மறை நெறிகளைப் பின்பற்றுவோரின் மன நிலையாக இருக்க முடியாது. ஆரம்பகாலத்திலும் இத்தகைய இழி செயல்களை எதிர்கொண்டுதான் இஸ்லாம் வளர்ந்தது. இந்த நேரங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை, இறைதூதர் முஹம்மது நபியவர்கள் நடந்து காட்டியுள்ளார்கள்.
நேர்மையான இஸ்லாத்தில் இழிசெயலுக்கு இடமுமில்லை. இத்தகைய செயல்களை இல்லாதொழிப்பதுதான் இஸ்லாத்தின் இலட்சியமுமாகும். எனவே, முஸ்லிம்கள் இவ்வாறானோரின் இழி செயல்களுக்கு இரையாகாமல், முஹம்மது நபியின் முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும்.
மனித சமூகத்தின் மாபெரும் பொது முதுசமான முஹம்மது நபியை ஐரோப்பா புரிந்துகொண்டாலும் ஏற்பதற்கு தயங்குவது, சில காரணங்களின் பின்னணிகளில்தான். மனச்சாட்சிகளைத் திறந்து இஸ்லாத்தைப் பார்த்தால், முஸ்லிம்களைச் சீண்டும் இழி செயலுக்கு ஐரோப்பா இடமளிக்காது என்பதை, என்னால் உறுதியாகக் கூற முடியும்.
மேலும், நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இன்றைய அவல நிலைமைகள் நீங்குவற்கும் மீலாத் தினத்தில் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.