வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த காலங்களில் தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சவாளியான இவர் கம்பாஹவில் பிறந்து, அரசியல் மற்றும் கல்வித்துறையில் பல பரிணாமங்களை கொண்டுள்ளார்.
அரசியல் ரீதியான பல சாணக்கியங்களை கொண்ட சுரேன், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்டுள்ளார்.
ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்று சாதனை படைத்தவர்.
பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் மேற்படிப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், அந்நாடுகளின் பல விருதுகளையும் வென்றுள்ளார்.
2008-2011ஆம் ஆண்டுகளில் அவருக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டது.
கனடா – ஒன்டோரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினையும் அவர் பெற்றுள்ளார்.
தற்போது வரையில் கனடா ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக செயற்பட்டு வருகின்றார்.
அவர் ஒரு பௌத்த சிந்தனைவாதியாக கருதப்படுகின்றது. பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத் தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
அவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.