கட்டுரைகள்பிரதான செய்திகள்

புலம்பெயர்ந்தோர் மடியில் பொழுது விடியும் வியூகம்!

சுஐப் எம்.காசிம்-

“காடுகாடாகப் பாய்ந்தாலும் மானின் புள்ளி மாறாது” என்பார்கள். இவ்வாறு மான் ஏன் பாய்கிறது? கஷ்டம் வந்தால் பாய்கிறது, சிலவேளைகளில் களிப்புக்காகவும் துள்ளுகிறது. எப்படிப் பாய்ந்தாலும் அதன் புள்ளிகள் மாறுவதில்லை. இப்படித்தானிருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலும். முப்பது வருடங்கள் கடந்தும் முனைப்புக்கள் சளைக்கவில்லை. நகர்வுகள் நலிவடையவில்லை, நம்பிக்கைகள் தளரவில்லை. இது எதனைக் காட்டுகிறது? அக்கட்சியின் இயல்பையே! இருப்பதிலிருந்துதானே இயல்பு பிறக்கிறது. தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கிறது, அது தீர்க்கப்படுவதை இக்கட்சி விரும்புகிறது, இதனால்தான் இந்த இயல்பு இருக்கிறது. இதற்காகக் கிடைத்த எந்தச் சந்தர்ப்பங்களையும் இக்கட்சி தவறவிட்டதுமில்லை. அண்மையில் கிடைத்த இரு சந்தர்ப்பங்களையும் கூட இக்கட்சி தவறவிட்டதில்லை. சர்வகட்சி மாநாட்டில், இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறது. ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வைத் திணித்திருக்கிறது. இந்திய வௌியுறவு அமைச்சரிடம் தமிழர்களின் அபிலாஷைகளுக்காக அரசாங்கத்தை அழுத்தும்படியும் கேட்டிருக்கிறது. இந்த முயற்சிகள் எப்போதாவது பலனளிக்கட்டும். ஆனால், அரசியலிலுள்ள சுபாவம் வௌிப்படுத்தப்பட்டிருப்பதுதான் இங்குள்ள விடயம்.

பொருளாதாரத்தின் மிகப்பெரிய நெருக்கடியில், தமது மக்களின் அரசியலை முதலிடுவதைவிட வேறென்ன வியூகம் வேண்டியிருக்கிறது. சர்வதேச உதவிகளின் எல்லைகள் கை கடந்துபோனால், புலம்பெயர் சமூகங்களின் தயவுகள் தேவைப்படுமென்ற புரிதல்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வியூகமாயிருக்கிறது. கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, 13 ஆவது திருத்தம், அபிலாஷை அரசியல் இன்னும் எத்தனையோ தமிழர்களின் தேவைகளை புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பொருளாதார பலத்துடன் முடிச்சுப்போட்டுள்ளது இக்கட்சி. இதற்கு இந்தியாவை மேய்ப்பாளனாக்கிய சம்பந்தனின் சாணக்கியம், தருணம்பார்த்து தலையைப் பிடித்தது போன்றதுதான்.

இச்சந்திப்புக்கள் முடிந்த கணத்தில், இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகள் பற்றிய விபரங்களை கையளிக்குமாறு இராணுவத் தளபதியால் கோரப்பட்டிருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுவிப்பதற்கு சமிக்ஞை காட்டப்பட்டிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களை வடக்கு, கிழக்கிலாவது முதலிட வைக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறைகளில்தான் தமிழர்களின் இந்த அபிலாஷைகள் அடையப்பட உள்ளன. இதற்கும் மேலாகச் சிந்தித்த இந்த தமிழ் தரப்பு காணி, பொலிஸ், நிதி அதிகாரங்களுடன் ஆளுநர்களின் அதிகாரங்களையும் ஐதாக்கிய மாகாண சபையையும் முன்மொழிந்திருக்கிறதே, ஏன்? பிடியில் பலமிருக்கிறது, வழியும் திறந்திருக்கிறது, எதற்கு தயங்க வேண்டும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு? இவை,இப்போதா சாத்தியம் எனச் சிலர் சிந்திக்கலாம். சாத்தியம் பற்றி இங்கு அலசப்படவில்லை. சந்தர்ப்பம், சமயோசிதம், மானின் புள்ளி மாறாத குணங்களே குறித்து காட்டப்படுகின்றன.

இப்பின்னணியில் கொதித்திருப்பது, இன்றுள்ள நெருக்கடியை தீர்க்குமா? அல்லது தீராப்பிரச்சினையாக்குமா? இதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சில வகிபாகம் இருக்கவே செய்கிறது. முதலீடுகளுக்காக புலம்பெயர் தமிழர்களை நம்பிக்கையூட்டல், இந்த நம்பிக்கை பிறக்க அரசாங்கத்தைப் பலப்படுத்தல் என்பவைகளே அவை. இடைவௌியாகிப்போயுள்ள தமிழ் தரப்பு அரசியல் இழுபறியைத் தீர்க்க இதுதான் இன்றுள்ள தெரிவு. தருணம்பார்த்து தலையைப்பிடித்துள்ள தமிழர் தரப்புக்கு, இதுபோன்ற சந்தர்ப்பம் இனி எப்போது வாய்க்கும் என்பதெல்லாம் ஆரூடங்களுக்கு அப்பாலானவை. யார் வந்தாலும் இருக்கப்போகும் (பொருளாதாரம்) இப்பிரச்சினையை இருப்போரை வைத்தே தீர்க்க முயற்சிப்பதுதான் தீர்க்கதரிசனம். இதுதான், புரையோடியிருக்கின்ற தமிழர்களின் அரசியல் பிரச்சினையைும் தீர்த்து வைக்கும். மக்கள் திரட்சியை விடுத்து ஏனைய எந்த நிலைமைகளிலும் இந்த வகிபாகம் இக்கட்சிக்கு இருக்கவே செய்யும்.

இன்றைய நிலையில் புதிய அரசியலமைப்பை மாத்திரம் சிந்திக்காது, உள்ளதற்குள் ஒரு வழி தேடுமாறு ஜெய்சங்கர் கூறியிருப்பதும் இதைத்தானோ தெரியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில், இந்திய மேற்பார்வைகளுடன் சில திட்டங்கள், ஒப்பந்தமாகியிருக்கையில், தொப்புள்கொடி உறவுகளுக்கு என்ன சிக்கல்? புலம்பெயர் உறவுகள்தான் இதுபற்றி அதிகம் சிந்திக்க இருக்கிறது. போரியல் வலிகளிலும், வாழ்வாதார வடுக்களிலும், பொழுதுகளைப் போக்கும் இந்த தொப்புள்கொடிகளுக்கு, புலம்பெயர் உறவுகள் தங்கள் மடிகளை விரிக்கக் கூடாதா? உள்ளக புலம்பெயர் உறவுகளின் ஆதங்கங்களே இவை.

ஆனால், இங்கு மிகப்பிரதான தவறும் நடந்திருக்கிறது. இந்திய வௌியுறவு அமைச்சரை தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் ஒரே தரத்தில் சந்தித்திருக்க வேண்டும். தமிழ்மொழி பேசுவோர் என்ற அடையாளத்துக்குள் இருக்கும் வேறுபாடுகளை இந்தியா புரிவதற்கு இவ்வாறான சந்திப்பு பலனளித்திருக்கலாம். இந்தத் தவறுக்கு அதிக பங்கெடுக்க வேண்டிய தரப்பு எதுவென யாரும் சொல்லத் தேவையில்லை. சர்வதேச அல்லது அயல் தேசத்தின் தார்மீகத் தேவைகளுக்குள் அரசாங்கம் இருக்கையில், தமிழ்மொழிச் சமூகங்களில் எது அதிக இலாபம் அடையும் என்பதையும் சொல்லவா வேண்டும்?

Related posts

நாளை தலைப்பிறை பார்க்க கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள்

wpengine

அம்பாறை முஸ்லிம் அரசியல்வாதிகளே! இறக்காமம் மீது இரக்கம் காட்டுங்கள்.

wpengine

ஊடக நிறுவனங்களுக்கும் , ஊடகவியலாளர்களுக்குமான பாதுகாப்பினை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் : மீரா அலி ரஜாய்

wpengine