Breaking
Sat. Nov 23rd, 2024

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, சர்ச்சைக்குரிய முன்னாள் தூதுவர் ஒருவரை சந்தித்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரேனில் செயற்படும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் விற்பனை செய்தமை மற்றும் பணியில் இருந்த ஊழியர் ஒருவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்களுடன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தலைமறைவாகியுள்ளார்.

உதயங்க வீரதுங்கவை இலங்கையின் வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் உதயங்க வீரதுங்க அண்மையில் மஹிந்த ராஜபக்சவை பாங்கொக் நகரத்தில் வைத்து சந்தித்தமை அரசியல் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மஹிந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியுடன் உதயங்கவின் இராஜதந்திர அந்தஸ்தும் இழக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரையில் இலங்கையின் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி, தாய்லாந்து சென்று மஹிந்தவை சந்தித்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

இராஜதந்திர சேவையில் இருந்து விலகும் தூதுவர் ஒருவர், பதவி விலகும் போது இராஜதந்திர கடவுச்சீட்டை மீளவும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

இந்நிலையில் இராஜதந்திர கடவுச்சீட்டை ஒப்படைக்காமல் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு சமூகம் தராமல், இரகசியமாக மறைந்திருக்கும் உதயங்க வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதற்காக சந்தித்திருப்பார் என சூழ்நிலைகளை அறிந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உதயங்க வீரதுங்கவுடன், நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச சந்தித்தமை பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *