(ஊடகப்பிரிவு)
புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக மன்னார்ப் பாதையை மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில், அந்தப் பாதையிலுள்ள 4 பாலங்களை புனரமைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழுகுகூட்டம் இன்று மாலை (2017.08.03) இடம்பெற்ற போது மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிஷாட் பதியுதீன் கொண்டு வந்த யோசனையை ஏற்றுக்கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இது தொடர்பாக மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகைள ஒப்படைத்தது.
இந்தக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற குழுவின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், மன்னார் மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், டெனீஸ்வரன் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
வட மாகாணத்துக்கும் தென்னிலங்கைக்குமிடையிலான போக்குவரத்தை இலகுபடுத்த இந்தப் பாதை பயன்தருமென்பதால் இதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
தற்போது புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக இருமருங்கிலும் துப்பரவுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் மன்னார் உப்பாறு வரை இந்தத் துப்பரவுப் பணிகளை சீர் படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வேண்டுகோள்விடுத்தார்.
வெளிநாடுகளில் மேற்கொள்வது போன்று கிரவலிங் காபட் முறையின் மூலம் இலவங்குளப் பாதையை செப்பனிடுவது சிறந்தது என்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆலோசனை வழங்கினார். பறயனாலங்குளம் – வவுனியா பாதை, நேரியகுளம் – நெளுக்குளம் பாதை, மற்றும் தலைமன்னார் பாதை ஆகிவற்றையும் புனரமைப்புச் செய்யவேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த வேளையில் அங்கு கருத்துத் தெரிவித்த மாகாண வீதி அதிகார சபைப் பணிப்பாளர், வவுனியா – பறயனாளங்குளப் பாதை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (IRIP) ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் திட்டம் 2019 ஜனவரி மாதமளவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்த போது, அது வரையில் மக்களை அந்தரிக்கவிட முடியாதே எனக்குறிப்பிட்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன், விரைவில் இவ்வாறான வீதிகளை மக்கள் பயணஞ் செய்யக்கூடியவாறான வகையிலாவது புனரமைப்புச் செய்து கொடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்வர வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்தக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் நீர்ப்பிரச்சினை, காணிப்பிரச்சினை, சுகாதாரப்பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை மற்றும் வனபரிபாலனத் திணைக்களத்தினால் வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட காணிகள் தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டு மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.