Breaking
Mon. Nov 25th, 2024

நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவினாலும் புத்தர் சிலை விவகாரங்கள் இனங்களிடையே ஒரு முறுகலை தோற்றுவித்துள்ளதோடு நல்லாட்சிக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை சாம்பல் தீவு  சந்தியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம்  தொடர்பாக இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கடந்த காலங்களில் பாதுகாப்புத் தரப்பினர் முகாமிட்டிருந்த எமது மக்களின் காணிகளில் பலவற்றில் அவர்களின் வழிபாட்டுக்காக  சிறு சிறு ஆலயங்களை அமைத்தார்கள். அந்த சிறிய ஆலயங்களை விகாரைகளாக மாற்றியமைக்கின்றார்கள்.

திருகோணமலை சாம்பல்த்தீவு சந்தியில் பாதுகாப்புத் தரப்பினர் முகாமிட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான காணியில்  அவர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை பாதுகாப்புத்தரப்பினர் முகாம் அகற்றும் போது நியாயமான முறையில் எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் இந்துக்களின் வழிபாட்டுக்காக பிள்ளையார் சிலை மற்றும் சூலம் வைக்கப்பட்டது. அன்றைய தினம் குறித்த பிள்ளiயார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பௌத்த பிக்குகளினால் குறித்த இடத்தில் மீண்டும் புத்த சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றுள்ளன.

புத்தர் ஓர் இந்துவாக இருந்தாலும் பௌத்த மக்கள் மத்தியில் பௌத்த விகாரைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். எங்களது பூர்வீக இந்து பூமியில் பௌத்த விகாரைகளை அமைக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

இது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சதித் திட்டமாகவே நான் கருதுகிறேன்.

புத்த விகாரைகள் புதிதாக அமைக்கப்படும் விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக தலையீடுசெய்து சாம்பல் தீவு சந்தியில் பிள்ளையார் சிலையை நிறுவி இந்துகள் வழிபாடு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *