அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் கால அவகாசத்தில் , 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்.!

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும்.வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பொதுஜன அபிப்ராயத்துக்கு போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு, பாராளுமன்றத்தில் விரிவான கலந்துரையாடலுடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்க தயாராகவே இருப்பிறோம்.இதற்கு முன்னர் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும்,  சுகாதார அமைச்சருமான நளிந்த  ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்  6 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடையது, சர்வதேச நாணய நிதியத்தினுடையது என்று  எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அத்துடன் வரவு செலவுத் திட்டத்துக்கு  பல பெயர்களையும் சூட்டுகிறார்கள். மக்களுக்கு பயனுடையதாக அமைந்தால் வேண்டிய பெயரை எதிர்க்கட்சிகள் பாதீட்டுக்கு  சூட்டிக் கொள்ளட்டும்.

நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்  நிவாரண வழங்கலுக்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்த தரப்பினரும்  புறக்கணிக்கப்படவில்லை.

வரவு செலவுத்திட்டத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.புதிய யாப்புருவாக்கம் குறித்து ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத்  தேர்தலிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

புதிய அரசியலமைப்பு  ஒன்று உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அதிகரிக்காமலும், குறைக்காமலும் எவ்வித மாற்றமில்லாத வகையில் செயற்படுத்தப்படும். சிறந்த வாய்ப்பு கிடைக்கப் பெறும் முதல் சந்தர்ப்பத்தில்  பொதுமக்களின் அபிப்ராயங்களுக்கும், பாராளுமன்ற ஆலோசனைக்கும் போதுமான காலவகாசம் வழங்கப்பட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்,அதற்கு தயாராகவே உள்ளோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு முன்னர்  பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்திக் கொள்ள  வேண்டும். அப்போது தான் புதிய அரசியலமைப்பை சிறந்த முறையில் இயற்ற முடியும். ஆகவே தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய, புதிய யாப்பினை உருவாக்குவோம்.

அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  சுகாதாரத்துறைக்கு அதிக நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அரச சேவையாளர்களின் சம்பளம் 80 சதவீதத்தால் வளர்ச்சிப் பெறும்.வரவு செலவுத் திட்டத்தின்  முன்மொழிவுகள்  செயற்படுத்தப்படும் என்ற அச்சத்தில் தான் எதிர்க்கட்சிகள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது என்றார்.

Related posts

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு இந்தியாவில் தடை ..!

Maash

கஞ்சா பொதி கடத்தலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமைப்பு அரசியல்வாதி

wpengine

மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக சிப்லி பாரூக் நியமனம்

wpengine