சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக பிள்ளையான் (Pillayan) தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவை சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது நேற்று மட்டக்களப்பு (Batticaloa) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரனால் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பு – சந்திவெளியில் கடந்த 2007 மார்ச் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது அந்தப் பகுதியில் இயங்கிய பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) தலைமையிலான ஆயுதக் குழு அவரை ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில், சந்திவெளி மற்றும் கிரானை சேர்ந்த தி. கிருஷ்ணரூபன்இ வ. திருச்செல்வம், கு. பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய நால்வரை ஏறாவூர் காவல்துறையினர் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வழக்கின் முடிவில் நால்வரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். இதையடுத்து நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி நேற்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.