“பிற மொழியையும் தெரிந்து வைத்திருங்கள். அது பிறரோடு பழக உதவும். அடுத்தவரை அணுக உதவும். வெறும் மொழிப்பித்து என்பது உங்களைக் கிணற்றுத் தவளையாக்கிவிடும்.
கிணற்றுத் தவளையும் நீந்தும் உயிர்வாழும். ஆனால், உலகத்தின் அனுபவமும் அளவும் அதற்குச் சிறியதாகத் தெரியும்” என முகம் கொள்ளாத சிரிப்புடன் எம்மோடு பேசத் தொடங்கினார் வணக்கத்துக்குரிய குட்டிக்குளமே விமலசார தேரர்.
“இந்த இனிப்பான தருணத்தில் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என இலக்கணத் தமிழில் தேன் சுவையாக கூறினார் 32 வயதான தேரர்.
“மொழிப்பற்று என்பது மரத்தின் வேரைப் போன்றது. வேர் மண்ணை ஊன்றியிருப்பதே எமக்குத் தேவை. அம்மரத்தின் கிளைகள் எண்ணிக்கை எமக்கு அவசியமற்றது.
இங்கு நான் கிளைகள் எனச் சொல்வது நாம் கற்றறிந்த சில மொழிகளே. மொழிகளை தங்களுக்குள் வளர விடுங்கள்.
அது உங்களை வளர்த்து விடும். நாடும் இனமும் வளரும்” என ஒரு போடு போட்டார் தேரர். அவரது அருமையான தமிழ் கேட்டு ஆடிப்போய் விட்டோம். ஆழமான தமிழ் மொழி அறிவு அவருக்குள் இருப்பதை தெரிந்து நாமும் சொக்கிப்போய் விட்டோம்.
அண்மையில் அநுராதபுரம் புனித நகரத்தில் உள்ள பஞ்சாராநந்த மஹா பிரிவெனாவுக்கு சென்றிருந்தோம்.
பௌத்த மத குருகுலத்தில் குருகுலக்கல்வி கற்றுக் கொடுக்கும் கட்டடப் பிரிவில் தமிழ் மொழியை இளம் பிஞ்சுகளான பௌத்த மத சிறுவயது தேரர்களுக்கு கற்றுக்கொடுக்கும் தருணத்திலேயே விமலசார தேரர் எமது பார்வைக்கு தென்பட்டார்.
அப்போதே அவரின் தமிழ் மொழி பற்றிய உணர்வை தெரிந்து வியந்தோம். அவர் எம்மோடு உரையாடும் போது சகோதர சிங்கள மொழியின் ஒரு வார்த்தையைக் கூட கலக்காமல் சுத்த தமிழில் அவர் பேசியதைக் கண்டு வியந்துப் போனோம் அதிரடியாக.
“நான் சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவன். அநுராதபுரம் குட்டிக்குளமே எனது ஊர். எனது அம்மாவின் குடும்பத்தாருக்கு தமிழில் ஒரு வார்த்தையும் தெரியாது.
அப்பாவின் குடும்பத்தினருக்கு தமிழ் மொழியில் நல்ல பரிச்சயம் உண்டு. இதற்கான காரணம் எனது அப்பாவின் கிராமத்தில் சகோதர இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தோர் பரம்பரையாக வாழ்கின்றனர். இதன் காரணமாக தமிழ் மொழி தொடர்பு எனது அப்பாவின் குடும்பத்திற்குள் ஊடுருவியது.
எனக்கு சிறுவயதில் தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாது வாழ்ந்தேன். இக்குருகுலத்தில் எனது சின்னஞ்சிறு வயதில் இணைந்தேன். இக்குருகுலத்தில் தான் நான் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டேன்.
மிகவும் இனிமையான செம்மொழி தமிழ். இத்தமிழ் மொழியை முதன் முதலில் வண. தேவானந்த தேரரிடம் கற்றேன்.
பின்னர் உடுநுவர வண. இந்தரத்தன தேரரிடம் தமிழ் மொழியைக் கற்ற நான், களனி பல்கலைக்கழகத்தில் இணைந்து தமிழ் மொழியில் டிப்ளோமா கற்கையைக் கற்று முடித்துள்ளேன்.
இன்னும் கற்க வேண்டும். இது மிகவும் ஆழமான மொழி. அதற்குள் குதித்து கற்க வேண்டும். வாரவாரம் தமிழ் பத்திரிகைகளை படிப்பேன். வாசிப்பே ஒரு மனிதனை முழுமையானவனாக வெளி உலகுக்கு அடையாளம் காட்டுகின்றது” என அவர் கூறினார்.
தேரரை இடை மறித்து “தமிழ் மொழியை எவ்வாறு சகோதர சிங்கள சமூக உறுப்பினர்களுக்கு கற்றுத் தருகின்றீர்கள்?” என்ற வினாவை எழுப்பினோம்.
“இன்று இக்குருகுலத்தின் பௌத்த இளம் சீடர்களுக்கு தமிழ் கற்றுத் தருகின்றேன். அநுராதபுரம் பிரதேசத்து பல பிரிவெனாக்களில் தமிழ் மொழியை கற்றுத் தருகின்றேன்.
சிங்கள ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்த பலரும் ஆர்வத்துடன் தமிழ் மொழியை என்னிடம் கற்று வருகின்றனர். எங்கும் எதிர்ப்பு எழுவதில்லை. சிங்கள மக்களின் இளம் சமூகத்தினர் இன்று தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதில் பெரும் ஆர்வமாக உள்ளனர்.
நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட பௌத்த சீடர்கள் தமிழ் மொழியைக் கற்று வருகின்றனர். இவர்கள் 12 முதல் 20 வயதைக் கொண்டவர்கள். தமிழ் தீண்டப்படாத மொழி அல்ல. இதை அனைவரும் உணர வேண்டும்” என உணர்ச்சி மேலிட சொன்னார் தேரர்.
இவற்றுக்கும் மேலாக தங்களின் தமிழ் பணி எவ்வாறு செயற்படுகிறது எனவும் அவரிடம் கேள்வியை தொடுத்ததும் மீண்டும் துளிர்க்கும் புன்னகையோடு நெற்றி சுருக்கி பதில் கொடுத்தார்.
“பௌத்த மத போதனைகளை தமிழ் சமூகத்தினர் மற்றும் என்னிடம் தமிழ் கற்கும் சிங்களவர்கள் மத்தியிலும் முன்னெடுக்கின்றனர்.
சகோதர இஸ்லாமிய சமூகத்தின் புனித நோன்பு காலத்தின் இப்தார் நிகழ்வுகளின் அழைப்பை ஏற்று அங்கு தமிழ் மொழியில் உரையாற்றுகின்றேன். இதுவே தமிழுக்கு நான் வழங்கும் சிறு தொண்டாகும்.
தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதோடு அம்மொழி பேசும் தமிழ் மக்களின் கலை, கலாசாரம், பண்பாடுகள் பற்றி கற்பதும் அவசியம். எந்தவொரு மொழியின் அழிவுக்கும் நாம் துணைபோகக் கூடாது.
பாவங்களிலேயே இச்செயலானது பெரும் பாவமாகும். மக்களின் மத்தியில் நல்லிணக்கம், புரிந்துணர்வுக்கு பிற மொழிக் கல்வி அவசியம். தமிழர்கள் சிங்களத்தையும், சிங்களவர்கள் தமிழையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
வளமான வாழ்விற்கு பிறமொழி அறிவுத் தேவை. பிற மொழியை கற்று அதனை பிறருக்கும் வழங்க வேண்டும். இதுவே கல்வி தானம் என்கின்றோம்.
தனது தாய் மொழிக்கு வழங்கும் கௌரவத்தையும் கண்ணியத்தையும் அனைவரும் ஏனைய மொழிகளுக்கும் வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
“மற்றொரு மொழியை தாய் மொழியாகக் கொண்ட நீங்கள் தமிழ் மொழியின் மீது பெரும் ஆர்வமும் கௌரவமும் கொண்டுள்ளீர்கள். நீங்கள் எமது நாட்டு மக்களுக்கு கூற விரும்புவது என்ன?” எனவும் கேள்வி எழுப்பினோம்.
இது குறித்து இங்கு மனம் திறந்து பேசினார் தேரர், “முப்பது வருட யுத்தம் எமது இரு சமூகத்திலும் பல கோணல்களை ஏற்படுத்தி விட்டது. இனி இவ்வாறான நிலை ஏற்பட வாய்ப்பு வழங்க எவரும் முனையக் கூடாது.
எனக்கு அரசியல் தெரியாது. மனிதர்களுக்காகத் தான் நாடு, மொழி, இனம், சமூகம் மற்றும் அதன் பிரிவுகள் அனைத்தும். பிற மொழியை கற்பது புரிதலில் வேர் விட்டு வளர்த்து விடும்.
அது மலர்ந்து மணம் பரப்பும். மலரும் மணமும் புதிய உலகை புதிய குழலை புதிய புரிதலை புதிய உணர்வை எம்மைச்சுற்றி வலம் வர வைக்கும். அப்போது எம்மை அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
அவ்வாறு இன்றி அமைப்புகளின் எதிரியாக உறவுகளின் எதிராக, சாதி, மதம், சமூகம் ஆகியவைகளின் விரோதிகளாக மாறி வாழப்பழக வேண்டாம்.
வாழ்க்கை சிக்கல் இல்லாது வாழ தர்மத்துடன் வாழ வேண்டும். அனைவரையும் நேசிக்க வேண்டும். விழிப்புணர்வோடு உங்களது வாழ்வை ஆராய்ந்து பாருங்கள். விடை கிடைக்கும்” என்றார் வண. குட்டிக்குளமே விமலசார தேரர். இதுவும் நிஜம் தானே!